அமெரிக்காவில் 6 வயது முஸ்லிம் சிறுவன் குத்திக் கொலைசெய்யப்பட்டான். அவனுடைய தாயாரும் தீவிர தாக்குதலில் காயமடைந்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக முதியவர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு மத்தியில் கடந்த 7-ம் திகதி முதல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்கம் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. ஈரான், ஈராக், துருக்கி போன்ற நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மக்கள் பேரணிகளை முன்னெடுத்தனர். அதைத் தொடர்ந்து, அமெரிக்கா போன்ற சில நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவான பேரணிகளும் நடத்தப்பட்டன.
அமெரிக்காவின் சிகாகோவுக்கு அருகில் இருக்கும் ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பின் இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்தவர், 71 வயது முதியவர் சுபுர்பன்.
இவர் 6 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொலைசெய்ததாகவும், சிறுவனின் தாயையும் கத்தியால் தாக்கியதாகவும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து விசாரித்த காவல்துறை அதிகாரிகள்,
“வீட்டு உரிமையாளர் கத்தியால் குத்திவிட்டதாக, பாதிக்கப்பட்ட 32 வயது பெண் காவல் நிலையத்துக்குத் தொலைபேசி மூலம் தகவலளித்தார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தோம். அங்கு ஒரு சிறுவன் கத்தியால் கடுமையாகக் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவனுடைய தாயும் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்தார்.
வீட்டு வாசலில் தலையில் கத்திக் காயத்துடன் முதியவரும் அமர்ந்திருந்தார். உடனே அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
அங்கு 6 வயது சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டான் எனவும், சிறுவனின் உடலில் 10-க்கும் மேற்பட்ட கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் தாயார் உடலிலும் பல கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. இந்தக் கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரும் முஸ்லிம்கள்.
சிறுவனின் மாமா, பாலஸ்தீனத்திலிருந்து பிழைப்புக்காக அமெரிக்காவுக்கு வந்தவர். தற்போது அமெரிக்கக் குடிமகனாக இருக்கிறார். எனவே, ஹமாஸ் – இஸ்ரேலியர்கள் மோதல்கள் காரணமாகச் சந்தேக நபர்களால் குறிவைக்கப்பட்டு கொலை முயற்சி நடந்திருக்கிறது என்பதை விசாரணையின் மூலம் தீர்மானிக்க முடிகிறது.
குற்றவாளிமீது கொலை முயற்சி, வெறுப்புக் குற்றங்கள், ஒரு கொடிய ஆயுதத்தால் மோசமான தாக்குதல் ஆகிய வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.
குற்றம்சாட்டப்படும் முதியவரைக் கைதுசெய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம். சமீபத்திய நாள்களில், அமெரிக்கக் காவல்துறை மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் யூத எதிர்ப்பு அல்லது இஸ்லாமிய வெறுப்பு உணர்வுகளால் தூண்டப்படும் வன்முறைகளைக் கையாள்வதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்” என்றனர்.