கடந்த வெள்ளிக்கிழமையன்று, இஸ்ரரேல் – லெபனான் எல்லையில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, அக்டோபர் 7 அன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அதையடுத்து தற்போது, பாலஸ்தீனத்தின் காஸா நகரில் கடுமையான பதில் தாக்குதலை நடத்திவருகிறது இஸ்ரேல்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 2,200-க்கும் மேற்பட்ட காஸா மக்கள் உயிரிழந்துவிட்டனர்.
அதேபோல், இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்த சிரியாமீதும், ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.
இன்னொருபக்கம், லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேல்மீது ஹிஸ்புல்லா குழுவினர் தாக்குதல் நடத்த, இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, இஸ்ரரேல் – லெபனான் எல்லையில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலின்போது, செய்தி சேகரிக்கச் சென்ற ராய்ட்டர்ஸ் ஊடகத்தைச் சேர்ந்த இஸாம் அப்துல்லா எனும் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இதில் காயமடைந்த தார் அல்-சுடானி, மஹேர் நாசே ஆகிய பத்திரிகையாளர்கள் இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
எங்கள் வீடியோகிராஃபர் இஸாம் அப்துல்லா கொல்லப்பட்டதை அறிந்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். தெற்கு லெபனானில் நேரடி ஒளிபரப்பை வழங்கும் ராய்ட்டர்ஸ் குழுவில் ஒருவராக இருந்தார் இஸாம்.
இந்த கடினமான நேரத்தில் எங்களின் எண்ணங்கள் அவரின் குடும்பத்தினருடன் இருக்கின்றன. மேலும், இஸாமின் குடும்பம் மற்றும் எங்களின் சக ஊழியர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும், தாக்குதலில்தான் பத்திரிகையாளர் உயிரிழந்தார் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித்து,
சம்பவத்தின்போது, அந்தப் பகுதியில் பத்திரிகையாளர்கள் காயமடைந்ததாக ஒரு தகவல் கிடைத்தது. அதுபற்றி ஆராய்ந்து வருகிறோம்” என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்திருக்கிறது.