நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலகக் கோப்பையில் அடுத்த 3 ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டமும் அடக்கம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணியின் பேட்டிங்கின்போது கேப்டன் கேன் வில்லியம்ஸன் சிறப்பாக விளையாடி 78 ரன்கள் குவித்தார். பேட்டிங்கின்போது, ரன் எடுக்க ஓடிய நிலையில் வங்கதேச வீரர் எறிந்த பந்து வில்லியம்ஸன் கைவிரலில் வேகமாக பட்டது. இதில் காயமடைந்த அவர், மைதானத்திலிருந்து ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் வெளியேறினார்.
மருத்துவர்கள் நடத்திய எக்ஸ்-ரே பரிசோதனையில் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து வரும் 18-ம் தேதி ஆப்கானிஸ்தான், 22-ல்
இந்தியா, 28-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டங்களில் வில்லியம்ஸன் களமிறங்கமாட்டார் என்று நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.