மிருசுவில் படுகொலைகளைச் செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ பொது மன்னிப்பு வழங்கியமையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் இணங்கியுள்ளது.
அந்த படுகொலைச் சம்பவத்தை செய்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜண்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பதவியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.
இதை எதிர்த்து கொழும்பிலுள்ள மாற்றுக் கொள்ளைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று (13.10.2023) அனுமதியளித்தது.
2000ஆம் ஆண்டு டிசம்பரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மிருசுவில் கிராமத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 8 தமிழ் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க குற்றவாளியாக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் 2019 இல் உறுதி செய்தது.
எனினும், கோவிட் பெருந்தொற்றுக்கால நெருக்கடியின் போது அதைச் சமாளிக்க இலங்கை போராடிக் கொண்டிருந்தபோது, கோத்தாபய ராஜபக்ஸ 2020 மார்ச் 26 அன்று, அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து இப்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.
இந்த மனுவை மேலும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், எதிர்மனுதாரர்களுக்கு பதில் அளிக்க கால அவகாசம் அளித்து, வழக்கின் விசாரணையை 2024 மே 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.