Friday, December 27, 2024
HomeSrilankaPoliticsஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை! - பிரிட்டன் உறுதி என்று சித்தார்த்தன் தெரிவிப்பு.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை! – பிரிட்டன் உறுதி என்று சித்தார்த்தன் தெரிவிப்பு.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீளவும் புதிய பிரேரணையைக் கொண்டு வருவதில் பிரிட்டன் உறுதியாக உள்ளது.

இந்தத் தகவலை புளொட் அமைப்பின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பிரிட்டன் அமைச்சர் ஆன் மேரி ரெவலியனுக்கும் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் நேற்றிரவு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் பிரிட்டன் அமைச்சருடன் அந்நாட்டு இலங்கைக்கான தூதுவர் அன்ரூ பற்றிக் கலந்துகொண்டிருந்ததுடன் தமிழ்க் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் சித்தார்த்தன் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில்,

“தமிழ் மக்களின் பல விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன. அதிலும் தமிழ் மக்களின் நிலைமைகளை அறிந்துகொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டியிருந்தார்கள். அதிலும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆழமான அறிவும் அவர்களுக்கு இருக்கின்றது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அடுத்த முறையும் அதாவது மார்ச்சில் கொண்டு வரப்படுமா? கடந்த காலங்களில் பிரிட்டன் செயற்பட்டது போல் இனியும் அதற்கு முயற்சி எடுக்குமா? எனப் பிரிட்டன் அமைச்சரிடம் கேட்டிருந்தேன்.

அதற்கு அவர் மிகத் தெளிவாகவே தங்களுடைய பதிலைச் சொல்லியிருந்தார். அதாவது இதற்கான முயற்சியை நிச்சயமாகத் தாங்கள் எடுப்பதாக அவர் சொன்னார். ஆனால், இன்னும் நீண்ட காலம் இருக்கின்றது என்றும், இதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்றும், உறுப்பு நாடுகள் என்ன செய்வார்கள் எனப் பார்க்க வேண்டும் என்றும், இனித்தான் அவர்களுடன் பேச வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அதேநேரத்தில் அந்த நாடுகளும் தாம் எடுக்கின்ற இந்த முயற்சிக்குச் சாதகமாகத்தான் இருப்பார்கள் என்று நம்புவதாகவும், அந்த முயற்சிகளை எடுப்பதாகவும் எங்களிடம் கூறியிருந்தார்.

ஆனாலும், அதனால் பிரயோசனம் இருக்கா என்றும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருந்தபோது, நான் சொன்னேன் இந்த நாட்டைப் பொறுத்தவரையில் அதனால் எந்தவொரு நன்மையும் ஏற்படாவிட்டாலும் அது ஒரு பேசு பொருளாக ஒரு உயர் சபையிலே இருப்பது மிக முக்கியமானது.

அது தொடர்ந்தும் பேசு பொருளாக இருக்கின்றபோது என்றோ ஒருநாள் அதன் அடுத்த கட்டத்துக்குப் போகக்  கூடியதாக இருக்கும். ஆகவே, நீங்கள் புதிய தீர்மானத்தைக் கட்டாயமாகக் கொண்டு வரவேண்டும் என்று கூறியிருந்தேன்.

இதனை நிச்சயம் செய்ய வேண்டுமென நாங்கள் மூன்று பேருமாக அவரிடம் கேட்டுக்கொண்டோம்.

அதேபோன்று இந்த நாட்டில் இருக்கக் கூடிய பல  பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இருவரிடமும் எடுத்துக் கூறியிருக்கின்றோம்.

குறிப்பாகக் காணிப் பிரச்சினைகள், இராணுவத்தால் ஏற்படுகின்ற பிரச்சினைகள், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரம் உள்ளிட்டவற்றை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தோம்.

அதனை அவர்கள் மிக ஆர்வமாகக் கேட்டறிந்தார்கள். அதேநேரம் பல விடயங்களை அவர்கள் அறிந்திருந்தாலும் எங்களிடம் இன்னும் கேட்டு ஆழமாக அறிந்து கொண்டார்கள்.

ஏனென்றால் எங்களது நிலைமைகளை அறிந்துகொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கின்றது. இந்தப்  பிரச்சினைகளில் தொடர்ந்தும் அவர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள் என்று நம்புகின்றேன்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments