இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா (வயது 77) சுகயீனம் காரணமாக இன்று காலமானார்.
பட்டிருப்புத் தொகுதியில் பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், கோட்டைக்கல்லாற்றை மணவாழ்க்கையாகவும் கொண்ட பொன். செல்வராசா, இலக்கம் 68, புகையிரத நிலைய வீதி, மட்டக்களப்பில் வசித்து வந்தார்.
ஆசிரியராகவும் அதன் பின்னர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பணியாற்றிய அவர், முதல் தடவையாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட்டாலும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. எனினும், அந்தத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவான நிமலன் சௌந்தரநாயகம் ஒரு மாத காலத்துக்குள் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அவரின் வெற்றிடத்துக்குப் பொன். செல்வராசா தெரிவு செய்யப்பட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணி நிறுவப்பட்டது. அதில் பொன்.செல்வராசாவின் அர்ப்பணிப்பு அளப்பரியது. அந்தக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.
2010ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சின் மூத்த துணைத் தலைவராகவும், மத்திய குழு, அரசியல் குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் அவர் அங்கம் வகித்தார்.
அவரின் இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இலக்கம் 68, புகையிரத நிலைய வீதி, மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.