சிங்கப்பூர் உள்ளரங்கில் வரும் சனிக்கிழமையன்று (அக்டோபர் 14) ‘ஹாய் ஒன் யுவன்’ என்னும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
‘மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ்’, ‘இஷ்தாரா ஜுவெல்லரி’ இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இதனை முன்னிட்டு, யுவன் சங்கர் ராஜா புதன்கிழமையன்று லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள இஷ்தாரா நகைக்கடைக்கு சிறப்பு வருகையளித்தார். இதனையடுத்து, அவரைக் காண இளம் ரசிகர்கள் பெருந்திரளாக அக்கடையின்முன் குவிந்திருந்தனர்.
“ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி, நியாயமான கட்டணத்தில், தரமான இசை நிகழ்ச்சியை வழங்குவதற்குக் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று சொன்னார் மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பார்த்திபன் முருகையன்.
அந்நிறுவனம் தனது இன்ஸ்டகிராம் பக்கம் வழியாக நடத்திய போட்டியில் பங்கெடுத்து வென்றவர்களுக்கு நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.
சமூக ஊடகங்கள் வழியாக இஷ்தாரா நகைக்கடை நடத்திய போட்டியில் பங்கெடுத்த அஸ்வின் சொக்கலிங்கம், 24, “யுவன் சங்கர் ராஜாவின் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கென்றே நான் பாரிசுக்கும் மலேசியாவிற்கும் சென்றிருந்தேன். இருந்தும், அவரை மீண்டும் காண்பதற்கான ஆர்வம் குறையவில்லை,” என்றார்.
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு முன்னதாக கனடா, பாரிஸ், ஜெர்மனி என உலகின் பல நகர்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, மக்களுக்கு விருப்பமான பல்வேறு பாடல்களை இசைத்து மகிழ்வித்தார் யுவன்.
இம்முறை ஹரிசரண், ஆண்ட்ரியா, சாம் விஷால், திவாகர் உள்ளிட்ட பல பாடகர்கள் சிங்கப்பூர் மேடையில் பாடவுள்ளனர்.