“தமிழர்கள் மீது என்னதான் பிரச்சினைகளைப் பேரினவாத அரசு ஏற்படுத்தினாலும் தமிழர்களின் விடுதலை வேட்கையை அடக்கி ஒடுக்க முடியாது.”
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிர்வாகத் தெரிவு இன்று (30) கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“இதுவரை காலமும் தமிழர்கள் மீது இன ரீதியான ஒடுக்குமுறைகளைப் பேரினவாத அரசு மேற்கொண்டு வந்தது. இப்போது தமிழர்கள் மீது மத ரீதியான பிரச்சினைகளையும் பேரினவாத அரசு உருவாக்கியுள்ளது. என்னதான் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் தமிழர்களின் விடுதலை வேட்கையைப் பேரினவாத அரசால் அடக்கி ஒடுக்க முடியாது.” – என்றார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாவட்டக் கிளை நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.