தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் – அன்ட்ரூ ப்ரான்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மார்க் – அன்ட்ரூ ப்ரான்ஸ் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு முக்கிய தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றார்.
அந்தவகையில் மார்க் – அன்ட்ரூ பிரான்ஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று (30) சந்திப்பு நடைபெற்றது. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
சந்திப்பின்போது தமிழ்ச் சமூகத்தின் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பாகவும், நாடு என்ற ரீதியில் பொதுவாக தாக்கங்களை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் சம்பந்தன் எம்.பி. வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த மார்க் – அன்ட்ரூ ப்ரான்ஸ், இந்த விடயத்தில் இரு தரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தி எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது பற்றி எதிர்வரும் காலங்களில் விரிவாகப் பேசலாம் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, அண்மைய காலங்களில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பகிரங்கமான முறையில் வெளிப்படுத்தப்பட்டு வரும் இனவாதக் கருத்துக்கள் மற்றும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இடம்பெறும் பௌத்த – சிங்கள மயமாக்கல் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது மார்க் – அன்ட்ரூ ப்ரான்ஸிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அதுமாத்திரமன்றி இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு தசாப்த காலம் கடந்துள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டிய சம்பந்தனும் சுமந்திரனும் இந்த விடயத்தில் இலங்கை அரசின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.