உலக செஸ் கோப்பை பைனலில், இந்தியா சார்பில் விளையாடி 2ம் இடத்தை பிடித்த பிரக்ஞானந்தா இன்று (ஆகஸ்ட் 30) சென்னை திரும்பியுள்ளார். மேளதாள முழங்க பூக்கள் தூவி பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த உலக கோப்பை செஸ் பைனலில், ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, உலகின் ‘நம்பர்-1’ வீரர், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உடன் கடைசி வரை போராடி, பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கத்துடன் இன்று(ஆகஸ்ட் 30) சென்னை திரும்பினார்.
தமிழக அரசு சார்பில், சென்னை விமான நிலையத்தில் காரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். மேளதாளம் முழங்க பூக்கள் தூவி பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் பூங்கொத்து கொடுத்து பிரக்ஞானந்தாவை வரவேற்றனர்.
பிரக்ஞானந்தா நிருபர்களிடம் கூறியதாவது:
வரவேற்க நிறைய பேர் வந்திருக்கிறார்கள்; மகிழ்ச்சியாக உள்ளது. இது செஸ் விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும். என்றார்.
ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை
பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரக்ஞானந்தாவை பாராட்டி கெளரவிக்கும் விதமாக உயரிய ஊக்கத் தொகையான ரூ.30 லட்சத்துக்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி ஸ்டாலின் வாழ்த்தினார்.
செய்தியாளர்களிடம் பிரக்ஞானந்தா கூறியதாவது:
தங்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறுவதே முக்கியம். அடுத்தடுத்து ஏராளமான செஸ் தொடர்கள் வருகின்றன. வழக்கம்போல் பயிற்சி எடுக்க வேண்டும். மக்கள் திரண்டு நின்று அமோக வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக விளையாட வருபவர்கள் நன்றாக என்ஜாய் செய்து விளையாடுங்கள். பிரசர் உடன் விளையாட வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.