நாட்டின் தென்மேல் பகுதியில் நிலவும் மழை நிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-45 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, சூரியனின் தென்திசை நோக்கிய தோற்ற இயக்கத்தின் காரணமாக, ஓகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கமைய இன்று (30) நண்பகல் 12.11 அளவில் தலைமன்னார் (மன்னார்), இரமியங்குளம் (வவுனியா மாவட்டம்), கரப்புக்குட்டி (திருகோணமலை மாவட்டம்), பழம்பாசி (முல்லைத்தீவு மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.