‘ஆசைவார்த்தை கூறி, திருமணம் செய்து கணவன் – மனைவியாக வாழ்த்து விட்டு, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து, என் வாழ்வை சீரழித்த சீமானை கைது செய்ய வேண்டும்’ என, நடிகை விஜயலட்சுமி, பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர், நடிகை விஜயலட்சுமி; இவர், சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளித்துள்ள புகார்:
சென்னை, தி.நகரில், என் சகோதரி உஷாதேவி வீட்டில் தங்கி, சினிமா படங்களில் நடித்து வந்தேன். தற்போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள, சீமான் இயக்கிய, வாழ்த்துகள் என்ற படத்தில் நடித்தேன். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
என் சகோதரியை அவரது கணவர் அடித்து துன்புறுத்தினார். இது தொடர்பாக, உஷாதேவி, 2008ல், மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சகோதரியின் கணவர், அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால், சீமானின் உதவியை நாடினோம். அவர் எங்களுக்கு சட்ட ரீதியாக, எந்த உதவியும் செய்யவில்லை.
ஒரு நாள், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள, நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கு என்னை வரவழைத்தார். ‘எனக்கு யாரும் இல்லை. உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ எனக் கூறினார். என் சகோதரி மற்றும் தாயிடம் கேட்டுச் சொல்வதாக கூறி விட்டேன்.
அதன்பின், என் தாய் மற்றும் சகோதரியை சந்தித்த சீமான், ‘உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உறுதுணையாக இருப்பேன். விஜயலட்சுமியை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்’ என, கேட்டார். ஒரு கட்டத்தில், எங்கள் உறவினர்களும் திருமணம் செய்து வைப்பது என, முடிவு செய்தனர்.
அப்போது, இலங்கை தமிழர் போராட்டம் தொடர்பாக, சீமான் கைதாகி, ஜாமினில் வெளிவந்த பின், மதுரையில் தங்கி இருந்தார். என்னை தொடர்பு கொண்டு, ‘அனாதை போல இருக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் நீங்கள் என்னுடன் இருந்தால், ஆறுதலாக இருக்கும்’ என, கூறி விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து, மதுரைக்கு வரவழைத்தார்.
சீமான் மற்றும் அவருடன் இருந்தவர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு சீமான் என் கழுத்தில் மாலை சூடினார். ‘நான் ஈ.வெ.ராமசாமி கொள்கைகளை பின்பற்றுபவன். அதை விட, நான் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவன். அதனால், தாலி கட்ட முடியாது’ என, மறுத்து விட்டார்.
அதன்பின், சென்னைக்கு வந்து, என் வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். ‘விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னிலையில், நம் இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது. அதை உலகமே பார்த்து வியக்கப் போகிறது’ என, கூறினார். பெரியோர் ஆசியுடன் எங்களுக்கு சாந்திமுகூர்த்தம் நடந்தது; நான், ஏழு முறை கருவுற்றேன்.
‘அரசியலில் நான் பெரிய ஆளாக வர வேண்டும். அதனால், இப்போதைக்கு குழந்தை வேண்டாம்’ என, கூறி, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார். ஒரு நாள் தேன்மொழி என்ற நபர், என்னை தொடர்புகொண்டு, சீமானுக்கும், தனக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறினார்.
அதுபற்றி, இயக்குனர் சேரனிடம் கேட்டேன். அவரும் உண்மைதான் என்றார். சீமானிடம் கேட்டபோது, மழுப்பலான பதில் அளித்தார்.
இதற்கிடையில், என்னுடன் குடும்பம் நடத்தியபடியே, கயல்விழி என்ற பெண்ணையும் திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார். இது எனக்கு பின்பு தான் தெரிந்தது.
‘நீ தான் என் மனைவி’ எனக் கூறி, குடும்பம் நடத்தி விட்டு, ரொக்கப் பணம், 60 லட்சம் ரூபாய், 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் பறித்துக் கொண்டார்.
அது பற்றி கேட்டால், போதையில் அடித்து துன்புறுத்தி வந்தார். சீமானால் தற்கொலைக்கு முயன்றேன். அவர் மீது, அ.தி.மு.க., ஆட்சியில் புகார் அளித்தேன். வளசரவாக்கம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தடா சந்திரசேகர் என்பருடன் சேர்ந்து, என்னை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்துக் கொள்வதாக கூறிய சீமான், புகார் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் என, எழுதி கொடுக்க வைத்து விட்டார்.
கயல்விழி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகள் என்பதால், அ.தி.மு.க., ஆட்சியில், எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.
தற்போது, தி.மு.க., ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என, புகார் அளித்துள்ளேன். என்னுடன் குடும்பம் நடத்தி, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து, என் உடலையும், மனதையும் கெடுத்து, தற்கொலைக்கு துாண்டி, என் வாழ்வை சீரிழித்த சீமானை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின், விஜயலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், ஊடகவியலாளர் ஒருவரை “டா” போட்டு ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்தார்.