“மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் ஆட்சியைத் தக்கவைப்பதற்கும், பிடிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குருந்தூர்மலை விவகாரம், கஜேந்திரகுமார் எம்.பியின் வீடு சுற்றிவளைப்பு என்பன இவற்றின் அங்கங்களாகும். இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் மக்கள் சிக்கக்கூடாது.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பொரளை தொகுதி கூட்டத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“2005 இல் ரணிலும், மஹிந்தவும் அரசியல் எதிரிகள் என்றனர். 2010 இலும் இருவருக்கிடையிலும் போட்டி என்றனர். 2015 இலும் இரு அணிகளாகவே போட்டியிட்டனர். 2019 இல் இரு அணிகளில் இருந்தனர். ஆனால், 2023 இல் இணைந்து ஆட்சி அமைந்துள்ளனர். இதுதான் இவர்களுக்கிடையிலான அரசியல் டீல். பிளவுபட்டிருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள், எனினும், உள்ளுக்குள் இணக்கம் இருக்கும்.
2005 இல் போரை முடிப்பது யார் என்றும், 2010 இல் போரை முடித்தது யார் என்றும் பிரசாரம் இடம்பெற்றது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் சர்வாதிகாரமா, ஜனநாயகமா எனப் பிரசாரம் இடம்பெற்றது. 2019 இல் தேசிய பாதுகாப்பு பற்றி பேசப்பட்டது. இதன்மூலம் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளும் மூடிமறைக்கப்பட்டன.
மக்கள் இன்று உண்மையை உணர்ந்துள்ளனர். நாட்டில் இரு பிரதான முகாம்கள்தான் உள்ளன. ஒன்று தேசிய மக்கள் சக்தி, அது மக்கள் ஆட்சிக்கான சக்தி. மற்றைய முகாம் ஊழல், மோசடிகளில் ஈடுபடும் அணி. எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைந்தால்தான் நாடு முன்னேறும்.
இன்று இனவாதத்தைத் தூண்டுகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வீடு சுற்றிவளைக்கப்படுகின்றது. குருந்தூர்மலை பிரச்சினை வருகின்றது. இவற்றைத் தோற்கடிக்க வேண்டும். அனைத்து இன மக்களும் சம உரிமை அனுபவிக்கும் வகையில் அமைதியான நாட்டை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு.” – என்றார்.