இந்தியாவின் இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை, பரிசாக அளிக்க போவதாக பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியின் பைனலில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்ட தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, கடைசி வரை போராடி டை பிரேக்கர் சுற்றில் தோல்வியடைந்தார்.
இருப்பினும், உலகின் நம்பர் 2, நம்பர் 3 வீரர்களை தோற்கடித்து, 18 வயதில் இறுதிப்போட்டி வரை முன்னேறி 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவுக்கு 1 கோடிக்கும் அதிகமான டிவிட்டர் பயனர்கள், மஹிந்திராவின் தார் காரை பரிசாக அளிக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், நான் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு, மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை பரிசாக அளிக்க போகிறேன்’ என தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டிற்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் இந்த விளையாட்டை (வீடியோ கேம்களின் மோகம் அதிகரித்துள்ள போதிலும்!) தொடர அவர்களுக்கு ஆதரவளிப்பதை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
இது எலெக்ட்ரிக் கார்களைப் போலவே நமது கிரகத்திற்கும் சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு. எனவே, பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி.,யை பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பிரக்ஞானந்தாவின் பெற்றோர்கள் ஸ்ரீமதி நாகலட்சுமி & ஸ்ரீ ரமேஷ்பாபு, தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்ததற்காகவும், அயராத ஆதரவை வழங்கியதற்காகவும் நம் நன்றிக்கு உரியவர்கள்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை செஸ் போட்டியில், வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் பிரக்ஞானந்தா, அடுத்தாண்டு கனடாவின் டொராண்டோ நகரில் ஏப்.,2 முதல் ஏப்.,25 வரை நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தெரிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.