Friday, December 27, 2024
HomeCinemaஹர்காரா- திரை விமர்சனம்.

ஹர்காரா- திரை விமர்சனம்.

திரைப்படம் எனும் வெகுஜன மக்களுக்கான காட்சி ஊடகத்தை படைப்பாளிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களின் கற்பனையை சொல்ல பயன்படுத்துவதுடன், கடந்த கால வரலாற்றை நவீன கால தொழில்நுட்ப உதவியுடன் சொல்வதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். 

அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் கடைநிலை ஊழியராக பணியாற்றும்  அஞ்சல்காரர் ஒருவரை பற்றிய வாழ்வியலையும், தபால்காரரின் கடந்த கால வரலாறு ஒன்றையும் நேர்த்தியாக சொல்லி இருக்கும் திரைப்படம் தான் ஹர்காரா. 

டிஜிட்டல் தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில், விளிம்பு நிலை மக்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் அரசாங்கம் தொடர்பான விடயங்களில் இன்றும் இடையறாது சேவை செய்து வரும் அஞ்சல் துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தொழில் முறை சார்ந்த கடினமான வாழ்க்கை முறையையும், இத்துறையில் சாதித்த ஒருவரின் வாழ்க்கையையும் இணைத்து விவரித்திருக்கும் திரைப்படம் தான் ஹர்காரா. இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.

முதலில் இப்படி ஒரு கதையை காட்சி மொழியாக விவரிக்கலாம் என நினைத்து செயல்படுத்திய படைப்பாளி ராம் அருண் காஸ்ட்ரோ அவர்களுக்கு ராயல் சல்யூட்.

தமிழகத்தின் தென் பகுதியில் மலையும் மலை சார்ந்த இடமுமான தேனி மாவட்டத்தில் உள்ள கீழ் மலை எனும் கிராமத்தில் அஞ்சல் அலுவலகம் ஒன்று செயல்படுகிறது. 

அதில் அஞ்சல் காரராக வேலைக்கு சேர்கிறார் காளி வெங்கட். அவருக்கு அந்த மலை கிராமத்தில் பணியில் சேர்ந்ததிலிருந்து ஏராளமான தொந்தரவுகள் இருப்பதால் விரைவில் பணி மாற்றம் செய்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பமும், இந்த இடத்தில் அஞ்சல் அலுவலகமே தேவையில்லை என்ற ஒரு பரிந்துரையையும் அவர் அரசுக்கு முன் வைக்கிறார்.

அவர் தன்னுடைய நாளாந்த பணிகளை மேற்கொள்ளும் போது நிலவியல் அமைப்பின் காரணமாக பல்வேறு இடர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எதிர்கொள்கிறார். 

இதனால் எளிதில் சோர்வும் விரக்தியும் அடையும் அவர், ஒரு நாள் தன்னுடைய பணி சார்ந்த பயணத்தின் போது வழித்துணையாக வந்த ஒரு முதியவரிடம் பேச்சுக் கொடுக்கிறார். 

அந்த முதியவர் நீங்கள் எதிர்கொள்வதெல்லாம் கடுமையான சிரமமில்லை இதற்கு முன் மாதேஸ்வரன் என்று ஒரு தபால்காரர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தார். அவருடைய பணியை பற்றியும்,  அவருடைய நாட்டுப்பற்று பற்றியும் கதையாக சொல்லத் தொடங்குகிறார்.‌

அந்தக் கதை… ஃப்ளாஷ்பேக்காக விரிவடைகிறது. ஆங்கிலேயருக்கு விசுவாசமாக பணியாற்றி வரும் மாதேஸ்வரன்- அந்த ஊரில் உள்ள தேசபக்தி மிகுந்த சிலர், ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி முறையையும் பிரித்தாளும் அரசியலையும் விவரிக்கிறார்கள். 

இதனை கேட்டு உணர்ந்த மாதேஸ்வரன் மெல்ல மனம் மாறி தேசத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார். இந்த தருணத்தில் நாட்டைப் பற்றிய ரகசிய ஆவணம் ஒன்று.. ஓரிடத்தில் சேர்க்குமாறு அவரிடம் வருகிறது. 

அவர் அதனை சேர்ப்பிக்காமல் ரகசியமாக ஒளித்து வைத்து விடுகிறார். இதனை கண்டறிந்த ஆங்கிலேய அதிகாரவர்க்கம் அவருக்கு கடுமையான தண்டனையை வழங்குகிறது. அந்த முதியவர் சொன்ன இந்த வரலாற்று கதையை கேட்ட காளி வெங்கட்  எம்மாதிரியான முடிவினை மேற்கொள்கிறார் என்பதுதான் படத்தின் உச்சகட்ட காட்சி.

படத்தின் இயக்குநரான ராம் அருண் காஸ்ட்ரோ, மாதேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து.. இயக்கத்தையும், நடிப்பையும் எம்மால் நேர்த்தியாக கையாள முடியும் என்பதனை நிரூபித்திருக்கிறார்.

படத்தின் சிறப்பம்சம் ..நிலவியல் அமைப்பில் வாழும் இயல்பான கதை மாந்தர்கள். அவர்களின் நடிப்பு. உடல் மொழி உச்சரிப்பு என பல விடயங்களை பட்டியலிடலாம்.

மலை வாசஸ்தலங்கள் தான் கதைக்களம் என்பதால் ஒளிப்பதிவாளர் சுற்றி சுற்றி அழகியல்களை தேடி கண்டுபிடித்து, காட்சிப்படுத்தி பார்வையாளர்களின் கண்களை வியப்பில் ஆழ்த்துகிறார். 

பாடல்களும் பின்னணி இசையும் கூட கதையோட்டத்திற்கு இயல்பாக அமைந்து, பார்வையாளர்களின் மனதில் பாராட்டை பெறுகிறது. ஆங்கிலேய காலகட்டத்திற்குரிய கதை விவரிக்கப்படும் போது கலை இயக்கமும் பாராட்டை பெறுகிறது.

இயக்குநர் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் குறிப்பாக வணிக ரீதியான அம்சங்களை எதையும் திணிக்காமல், ‘கலை மக்களுக்காக’ எனும் கொள்கையில் படைப்பை உருவாக்கி இருப்பதை மனதார பாராட்டலாம்.

தயாரிப்பு : கலர்ஃபுல் பீட்டா மூவ்மெண்ட்

நடிகர்கள் : ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், கௌதமி சவுத்ரி, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி மற்றும் பலர்.

இயக்கம் : ராம் அருண் காஸ்ட்ரோ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments