Friday, December 27, 2024
HomeIndiaமதுரை ரயில் தீ விபத்து 10 பேர் உயிரிழப்பு!யாருடைய அலட்சியம் காரணம்?’

மதுரை ரயில் தீ விபத்து 10 பேர் உயிரிழப்பு!யாருடைய அலட்சியம் காரணம்?’

ரயில் பெட்டிகளில் சிகரெட், தீப்பெட்டி எடுத்துசெல்லவே தடை உள்ள நிலையில் எவ்வாறு லக்னோவில் இருந்த கேஸ் சிலிண்டர், காய்கறி, அரிசி மூடைகளுடன் வந்தனர் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீஸார் கண்காணித்திருக்க வேண்டும் அல்லது டிடிஆர் டிக்கெட் பரிசோதனையின் போதாவது கவனித்திருக்க வேண்டும்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்த கோச்சில் பயணித்த சுற்றுலா பயணிகள், மதுரை ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியாகினர். விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்து மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு ஆந்திரா வழியாக தமிழ்நாடு வந்தவர்கள், நாகர்கோவிலில் இருந்து நேற்று ரயில் எண்.16730 புனலூர் டு மதுரை எக்ஸ்பிரஸ் மூலம் அதிகாலை 3.47 மணிக்கு மதுரை வந்தனர். அவர்கள் வந்த ரயில் பார்ட்டி கோச்கள் பிரிக்கப்பட்டு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை டு போடி செல்லும் ரயில் பாதைக்கு அருகே காலி பெட்டிகள் நிறுத்தி வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தண்டாவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.15 மணி அளவில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் எண் 16824 கொல்லம் டு சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்பி அங்கிருந்து லக்னோ திரும்ப திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில் தீ விபத்தில் இருந்து தப்பிய உத்தரபிரதேசம் லக்னோவைச் சேர்ந்த பிரவீன் குப்தா தெரிவித்துள்ளதாவது.

“உத்திரபிரதேசம் லக்னோ உள்பட 4 பகுதிகளில் இருந்து 63 பேர் ஆகஸ்ட் 17-ஆம் திகதி புறப்பட்டோம். தென்னிந்தியாவில் ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிட்டு முதலில் ஆந்திராவில் மல்லிகார்ச்சுனேஸ்வரர் கோயில், பாலாஜி கோயில் உள்ளிட்ட முக்கியமான கோயில்களுக்கு வழிபட்டு விட்டு, நாகர்கோவில், கன்னியாகுமரி சென்றுவிட்டு இன்று லக்னோ புறப்பட இருந்தோம்.

இன்று காலை ராமேஸ்வரம் சென்றுவிட்டு, நாளை சென்னை திரும்ப இருந்தோம். அதற்காக இன்று அதிகாலை மதுரை வந்த நிலையில் நான் என் நண்பர் சஞ்சய் உள்ளிட்ட சிலர் மட்டுமே ரயில் பெட்டிக்கு வெளியே வந்திருந்தோம். அப்போது பெட்டிக்குள் சமையல் மாஸ்டர் டீ போட்டபோது தீப்பற்றியதில் பயணிகள் அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர்.

நாங்கள் கூச்சலிட்டு கொண்டே அனைவரையும் காப்பற்ற முயற்சித்தோம். அந்த நேரத்தில் தீ மளமளவென பற்றியது. பதற்றத்தில் ரயில் பெட்டியின் கதவுகளையும் திறக்க முடியாமல் போனதால் 12-க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கினர். நாங்கள் கூச்சலிட்டத்தை பார்த்த அருகே இருந்த மக்கள் உதவிக்கு வந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் வந்து உதவினர் இருந்தபோதிலும் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துவிட்டனர்.

நான் ஏற்கெனவே தொழில் நிமித்தமாக மதுரை வந்துள்ளேன். தற்போது ஆன்மிக சுற்றுலாவுக்கென வந்த இடத்தில் இப்படியாக நிகழ்வு நடந்ததால் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மதுரை கோட்ட ரயில் அதிகாரிகள் சிலர் தெரிவித்திருப்பதாவது,

“முக்கியமான ரயில்வே நிலையங்களில் சுற்றுலா ரயில் பயணிகளுக்கென தனியாக இடம் ஒதுக்கப்படும். அவர்கள் தங்கி ஓய்வெடுக்கவும், குளிக்கவும் ஏற்பாடுகளை செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவின் முக்கிய ரயில் நிலையமான மதுரையில் சுற்றுலா ரயில் பயணிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை. மேலும் ரயில் பெட்டிகளில் சிகரெட், தீப்பெட்டி எடுத்துசெல்லவே தடை உள்ள நிலையில் எவ்வாறு லக்னோவில் இருந்த கேஸ் சிலிண்டர், காய்கறி, அரிசி மூடைகளுடன் வந்தனர் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீஸார் கண்காணித்திருக்க வேண்டும் அல்லது டிடிஆர் டிக்கெட் பரிசோதனையின் போதாவது கவனித்திருக்க வேண்டும்.

பெரும்பாலும் சுற்றுலா ரயில் பெட்டிகள் எவ்வித கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவது இல்லை. இவ்விபத்துக்கு பொறுப்பானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் அலட்சியம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்கள்.

விபத்தில் சிக்கிய ஜோதி என்பவர் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த 5 நாள்களாக தென்னிந்தியாவில் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். இன்று காலை ராமேஸ்வரம் செல்ல தயாராகி கொண்டிருந்தோம். முன்னதாக பெட்டியில் வைத்தே பயணிகளுக்கு சமையல்காரர் தீரஜ் குப்தா டீ மற்றும் ஸ்நாக்ஸ் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தீப்பற்றியது. திருட்டு அச்சம் காரணம் பெட்டியில் இருந்த 4 கதவுகளில் 3 கதவுகளை மூடி வைத்துவிட்டு ஒரு கதவை மட்டும் திறந்து வைத்திருந்தோம். இதனால் அனைவரும் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. அந்த நேரத்தில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. தப்பித்து வெளியே வந்தபோது பெட்டி முழுவதுமாக எரிந்து சிலிண்டர் வெடித்து சிதறியது” என்று தெரிவித்துள்ளார்.

மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது,

“ரயிலில் சட்டவிரோதமாக சிலிண்டர் எடுத்துவரப்பட்டது உள்பட அனைத்து விவரங்களையும் உத்தரபிரசேத மாநில அரசுக்கு தெரிவித்துவிட்டோம்.

காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். அதேபோல சிறு காயமடைந்தவர்கள், விபத்தில் இருந்து தப்பியவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளோம். அவர்களை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ரயில்வே எச்சரிக்கை எதையும் பொருட்படுத்தாமல், சிலிண்டர் வரை எடுத்து வந்த பயணிகள் ஒருபுறம், டிக்கெட் பரிசோதகர் முதல் ரயில்வே போலீஸ் வரை யாரும் அதை கண்டுகாதது மறுபுறம் என இந்த விபத்துக்கு பல அலட்சியங்கள் காரணமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments