இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்திற்குள் இருந்த பிரக்யான் (Pragyaan) ஆய்வு வண்டி நிலவின் மேற்பரப்பில் முதலடி எடுத்து வைத்துள்ளது.
26 கிலோகிராம் எடையுள்ள அந்த ஆய்வு வண்டியின் வழியாக இந்தியா நிலவில் காலடி எடுத்து வைத்துள்ளதாக ISRO என்னும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்தது.
விக்ரம் என்னும் பெயர்கொண்ட விண்கலம் நேற்று நிலவின் தென்துருவத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அப்போது எழுந்த புழுதி அடங்கும்வரை ஆய்வு வண்டி வெளிவரவில்லை.
பின்னர் அது, சாய்தளம் வழியாக நிலவின் மேற்பரப்புக்கு உருண்டு சென்றது. இனிமேல் அது, நிலவின் மேற்பரப்பிலுள்ள பாறைகளிலும் பள்ளங்களிலும் சென்று முக்கியத் தகவல்களைத் திரட்டும்.
பிரக்யான் ஆய்வு வண்டி முக்கியமான படங்களையும் எடுத்து பூமிக்கு அனுப்பிவைக்கும். நிலவின் மேற்பரப்பில் தாதுக்கள் உள்ளனவா என்று அது சோதிக்கும். நிலவிலுள்ள மண்ணின் ரசாயனச் சேர்க்கை பற்றியும் அது ஆராயும்.
விக்ரம் விண்கலத்தோடு மட்டுமே அது தொடர்புகொள்ளும். விண்கலம், ஆய்வு வண்டியை இறக்கிவிட்டபின் தற்போது நிலவைச் சுற்றத் தொடங்கியுள்ளது. அப்போதுதான் அது, ஆய்வு வண்டி திரட்டும் தகவல்களைப் பூமிக்கு அனுப்பமுடியும்.