“இனவாதம், மதவாதத்தை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இனவாதம், மதவாதம் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டவர்கள் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்கள். இதனால் நாடு முழுவதும் இனவாதக் கருத்துக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.”
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் பேசுகையில்,
“இனவாதக் கொள்கையுடைய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் தரப்பினர்கள் தற்போது வெறுக்கத்தக்கப் பேச்சுக்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் நிலையில் நாட்டில் இந்து மற்றும் பௌத்த மத முரண்பாடுகள் தோற்றம் பெறும் சூழல் காணப்படுவதாக எச்சரிக்கைகள், செய்திகள் வெளியாகியுள்ளன. .
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இன, மத முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் மகாவலி அபிவிருத்தி விவகாரம் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது .பௌத்த பிக்குகள் ‘சாணக்கியன், சாணக்கியன் ‘ என்று எனது பெயரைக் கூறி கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.
இனவாதம், மதவாதம் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டவர்கள் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்கள். தேர்தல் ஒன்று இடம்பெற்றால் தென்னிலங்கையில் இனவாதப் பிரசாரங்களை அடிப்படையாகக் கொண்டு விருப்பு வாக்குகளுக்குக் கடும் போட்டி ஏற்படும் அளவுக்கு நாடு முழுவதும் இனவாதக் கருத்துக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன .
இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இந்து – பௌத்த முரண்பாடுகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து அரசு விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.” – என்றார்.