Saturday, December 28, 2024
HomeSrilankaசரத் வீரசேகரவின் மீது கடும் நடவடிக்கைக்குச் சுமந்திரன் கோரிக்கை!

சரத் வீரசேகரவின் மீது கடும் நடவடிக்கைக்குச் சுமந்திரன் கோரிக்கை!

முல்லைத்தீவு நீதிவானைத் தனிப்பட்ட முறையில் மிக மோசமாக நாடாளுமன்றத்தில் விமர்சித்ததன் மூலம் நாடாளுமன்றத்தின் கௌரவத்தைக் கீழ்மைப்படுத்தி மிகக் கேவலமாக நடந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராகச் சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று சபையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

சரத் வீரசேகரனின் நேற்றைய உரையையொட்டி இன்று நாடாளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றைக் கிளப்பி சுமந்திரன்  கருத்து வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியவை வருமாறு:-

“சரத் வீரசேகர, இது இரண்டாவது தடவையாக இப்படி மோசமான உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார். இந்த நாட்டைச் சேர்ந்த சிங்கள மகனாகிய எனக்கு தமிழ் நீதிபதி ஒருவர் எப்படி உத்தரவிட முடியும் என்று இனவாதப் போக்கில் அவர் இந்தச் சபையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

அவர் நேற்று இந்தச் சபையில் பேசும்போது ஒரு நீதிபதியின் – முல்லைத்தீவு நீதிவானின் – செயற்பாட்டைக் குறிப்பிட்டு, அவரது தனிப்பட்ட நடவடிக்கையாக அதை விமர்சித்து, அவரை ஒரு மனநோயாளி எனவும், அவரது மனைவி பற்றியெல்லாம் பிரஸ்தாபித்து, மிக மோசமான உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார். இது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 83 ஆம் பிரிவை மீறும் செயல்.

ஒரு நீதிபதி நீதி நிர்வாக விடயத்தையொட்டி மேற்கொள்ளும் நடவடிக்கையைத் தனிப்பட்ட செயற்பாடாக விமர்சிக்க முடியாது. ஒரு காத்திரமான பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின்னரே, அப்படியான விடயத்தை விமர்சித்து விவாதிக்க முடியும்.

இது, இரண்டாவது தடவை அவர் மேற்கொள்ளும் இத்தகைய மோசமான செயற்பாடு. முதல் தடவை அவர் இதனைச் செய்த போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்றவை கடுமையாக ஆட்சேபித்தன. அச்சமயத்தில் நான் இங்கு ஏற்கனவே ஆற்றிய உரை ஒன்றை அவர் ஆதாரம் காட்டி, நானும் அப்படி நடந்து கொண்டேன் என்று சமாதானம் கூற முற்பட்டார்.

என்னுடைய உரை வித்தியாசமானது. நான் நீதிமன்றம் ஒன்றின் விசேட முடிவை – தீர்மானத்தை – விமர்சித்தேன். நான் எந்த நீதிபதியின் பெயர் குறிப்பிட்டோ அல்லது அவரின் நடவடிக்கை குறித்தோ விமர்சிக்கவில்லை.

நீதிமன்றங்களின் தீர்மானங்கள், முடிவுகள் இந்தச் சபையில் மட்டுமல்ல, சபைக்கு வெளியிலும் பகிரங்கமாக விமர்சிக்கப்படலாம். அதில் நீதிமன்ற அவமதிப்பு எதுவும் இல்லை.

இரண்டு தடவைகளும் அவர் (சரத் வீரசேகர) நீதிபதியின் செயற்பாட்டைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்கின்றார்.

இந்த நாட்டைச் சேர்ந்த சிங்களவளான எனக்கு, தமிழ் நீதிபதி எப்படி உத்தரவிட முடியும் என்று அவர் இங்கு கூறி இருக்கின்றார். அந்த நீதிபதி மனநோயாளி என்று விமர்சித்திருக்கின்றார். இது மிக மிக மோசமான உரிமை மீறலாகும்.

இது வெறுமனே நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளை மீறும் செயல் மட்டுமல்ல, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மிக மோசமான மனித ஒழுக்க மீறல் நடவடிக்கையுமாகும். அத்தோடு இந்தச் சபையின் உயர் கௌரவத்தைக் கேவலப்படுத்தி, கீழ்மைப்படுத்தும் செயற்பாடும் கூட . இந்த விடயத்தில் சபாநாயகரின் கடும் நடவடிக்கை அவசியம்.

அவரது உரை ‘ஹன்சாட்’ பதிவில் இருந்து நீக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல. இந்தச் சபையின் சிறப்புரிமையை இத்தகைய மோசமான நடவடிக்கை மூலம் மீறியமைக்காக அவர் மீது சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார் சுமந்திரன் எம்.பி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments