வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டி (22) காலை 7.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து குமுழமுனை மகாவித்தியாலய முன்றலில் நிறைவடைந்தது.
வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டியில் பாடசாலையின் 200 மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றியுள்ளனர்.
இந்த மரதன் ஓட்டப் போட்டி நிகழ்விற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கியுள்ளார் தற்போது கனடாவில் வசிக்கும் முன்னாள் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் மரதன் ஓட்ட வீரன் கந்தசாமி பத்மநாதன்.
இன்றைய மரதனோட்ட நிறைவு நிகழ்வு குமுழமுனை மகாவித்தியாலய நிகழ்வு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் முல்லை வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர், நிர்வாகப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.