Saturday, December 28, 2024
HomeSrilankaநீதித்துறையை அவமதித்து நாடாளுமன்றில் மீண்டும் இனவாதம் கக்கிய சரத் வீரசேகர! 

நீதித்துறையை அவமதித்து நாடாளுமன்றில் மீண்டும் இனவாதம் கக்கிய சரத் வீரசேகர! 

“குருந்தூர்மலையில் கை வைப்பதை அடிப்படைவாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவர் பௌத்தர்களுக்கு இடமளிக்கமாட்டார். ஆனால், தமிழர்கள் பொங்கல் பொங்குவதற்கு இடமளிப்பார். மனநோயாளியான நீதிபதியால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியாது. ஆகவே, முல்லைத்தீவு நீதிமன்றத்துக்குப் பிறிதொரு நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு நீதி அமைச்சரிடமும், நீதிச் சேவை ஆணைக்குழுவிடமும் வலியுறுத்துகின்றேன்.”

இவ்வாறு முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான ரியல் அட்மிரல் சரத் வீர சேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் (22) நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“தொல்பொருள் கட்டளைச் சட்டத்துக்கு எதிராகவே முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி குருந்தூர்மலையில் பொங்கல் பொங்கும் இந்து மத வழிபாட்டில் ஈடுபட  அனுமதி வழங்கியுள்ளார். தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் ‘பௌத்தர்களின் மனங்களைப் பாதிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது. அவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான தெளிவான கட்டளைச் சட்டங்கள் காணப்படுகின்ற நிலையில் நீதிபதி தவறான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளமை பாரிய பிரச்சினைக்குரியது.

குருந்தூர்மலைக்குக் கடந்த 18 ஆம் திகதி  தமிழ் அரசியல்வாதிகளுடன் வருகை தந்த குண்டர்கள் அப்பகுதியில் இருந்த குருந்தூர்மலையின் விகாராதிபதி சாந்த போதி தேரரைத் தகாத வார்த்தைகளால் தூற்றி, வெளியேற்றினர். இவ்வாறான செயற்பாடுகளால் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்படாதா? நாங்கள் பொறுமையாக இருக்கின்றோம். அந்தப் பொறுமையை கோழைத்தனம் என்று கருதக் கூடாது  

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்றே கூறப்படுகின்றது. நீதிபதியின் மனைவியே இந்த நீதிபதி ஒரு மனநோயாளி; ஆகவே அவரைத் தான் மனநோய் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதாக முல்லைத்தீவு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் எவ்வாறு நீதிபதியாகச் செயற்பட முடியும்?.  இவர் பௌத்தர்களுக்கு இடமளிக்கமாட்டார். ஆனால், தமிழர்கள் பொங்கல் பொங்குவதற்கு இடமளிப்பார். மனநோயாளியான நீதிபதியால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியாது. ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்குப்  பிறிதொரு நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு நீதி அமைச்சரிடமும், நீதிச் சேவை ஆணைக்குழுவிடமும் வலியுறுத்துகின்றேன்.

இனவாத கொள்கையற்ற தமிழ் நீதிபதிகள் பலர் நாட்டில் உள்ளார்கள். ஆகவே, அவர்களை முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி  இளஞ்செழியனின் உயிரைச் சிங்கள பௌத்த பொலிஸாரான சரத் ஹேமச்சந்திர தனது உயிரைக் கொடுத்து பாதுகாத்தார். நீதிபதி இளஞ்செழியன்  அந்தப் பொலிஸாரின் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை முழுமையாகப் பொறுப்பேற்று அவர்களுக்கு இன்றும் உதவி செய்து வருகின்றார்.

எம் மத்தியில் இனவாதம், மதவாதம் கிடையாது. இல்லாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க வேண்டாம் என்பதைத்  தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் விடுதலைப்புலிகளைப் போசித்தார். இறுதியில் புலிகளே அவரைப் படுகொலை செய்தார்கள். அமிர்தலிங்கத்தின் மனைவி மற்றும் இரு பிள்ளைகளைச் சிங்கள பௌத்த பாதுகாவலர்களே பாதுகாத்தார்கள்.

சிங்கள இனத்துக்கு எதிராகச் செயற்படுபவர்களை – கடுமையாக விமர்சிப்பவர்களை சிங்கள பௌத்தர்களே பாதுகாத்துள்ளார்கள். இவ்வாறான இனம் உலகில் எங்கும் இருக்காது. சிங்களவர்களுக்கும், பௌத்த மரபுரிமைகளுக்கும் எதிராகச் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்குச் சிங்கள பௌத்தர்களே உள்ளார்கள்.

குருந்தூர்மலையில் கை வைப்பதை அடிப்படைவாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தொல்பொருள் விவகாரம் நாட்டின் தற்போதைய பிரதான தேசிய பிரச்சினையாக உள்ளது. தொல்பொருள் எமது உரிமை. அத்துடன் தொல்பொருள் எமது தேசிய அடையாளம். அந்தவகையான தேசிய அடையாளத்தை அழிக்க முயற்சிப்பது தேசத்துரோகம். தூர நோக்கமற்ற வகையில் பிறப்பிக்கப்படும் கட்டளைகளால் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும். அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்குப் பொறுப்பான நீதிபதியும், தமிழ் அரசியல்வாதிகளும்தான் பொறுப்பு.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments