முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை மனநோயாளி என்று கூறும் சரத் வீரசேகரதான் ஓர் அரசியல் மனநோயாளி. இவரைப் போன்ற அரசியல் மனநோயாளிகள் நாடாளுமன்றத்தில் இருந்து மாத்திரமல்ல, இலங்கை அரசியலிலும் இருந்தும் முற்றாக நீக்கப்பட வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் பொதுச்செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,
“புற முதுகில் குத்தும் பழக்கம் சிங்களவர்களுக்கு இல்லை என்று சரத் வீரசேகர எம்.பி. கூறினார். தமிழர்கள் நன்றி மறந்தவர்களும் அல்லர்; துரோகமிழைத்தவர்களும் அல்லர் என்பதனை அவர் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அவருக்குச் சில விடயங்களை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இலங்கை சுதந்திரமடைய உங்களுக்குத் தமிழர்கள் தேவைப்பட்டார்கள். சேர். பொன். இராமநாதன், சேர்.அருணாச்சலம் ஆகியோர் இலங்கை சுதந்திரமடைய முன்னிலை வகித்தார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. ஆனால், சுதந்திரத்துக்குத் தமிழர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னர் அவர்கள் உங்களுக்குத் தேவைப்படவில்லை. அதனால் தமிழர்கள் பல அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 1957 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்தி இந்த நாட்டை பாரிய இன வன்முறைக்குள் தள்ளியது சிங்கள அரச தலைவர்கள் என்பதை நீங்கள் எவரும் மறந்து விடக்கூடாது
தனிச் சிங்களச் சட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாக தந்தை செல்வாவுடன் அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்க ஒப்பந்தம் கைச்சாத்திட்டார். பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன கொழும்பில் இருந்து கண்டிக்குப் பௌத்த தேரர்களுடன் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டார்.
சொந்த நாட்டில் தமிழர்களைப் படுகொலை செய்து அவர்களை அகதிகளாக்கிய பெருமை சிங்கள பெரும்பான்மை அரச தலைவர்களையே சாரும் என்பதையும் நீங்கள் மறந்து விடக் கூடாது.
தமிழர்கள் ஒருபோதும் ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை. அஹிம்சை வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போராடினார்கள். ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டார்கள். ஆனால், தமிழர்களின் அஹிம்சை வழிப் போராட்டத்தைச் சிங்களத் தலைவர்களே ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்தார்கள்.
குருந்தூர்மலையில் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை என வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தெற்கில் இருந்து கொண்டு குருந்தூர்மலை பௌத்தர்களுடையது என்று கூச்சலிடுகின்றீர்கள். விடுதலைப்புலிகள் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து பௌத்த விகாரைகள் அழிக்கப்படவில்லை, அவை பாதுகாக்கப்பட்டன.
தெற்கில் இனவாதத்தைப் பரப்பி விடுகின்றீர்கள். கொழும்பில் வாழும் தமிழ் எம்.பி.க்களின் வீடுகளை முற்றுகையிடுவதாகக் கூறி இனவாதத்தைத் தோற்றுவிக்கின்றீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் ஒரு கூட்டணியாக இணைந்து இனவாதத்தைப் பரப்பி இந்த நாட்டை இனவாதத் தீக்குள் தள்ளுகின்றீர்கள்.
குருந்தூர்மலையில் பொங்கல் பொங்குவதற்கு இடமளித்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை மனநோயாளி என்று சரத் வீரசேகர கூறுகின்றார். உண்மையில் சரத் வீரசேகரதான் ஓர் அரசியல் மனநோயாளி. இவரைப் போன்ற அரசியல் மனநோயாளிகள் நாடாளுமன்றத்தில் இருந்து மாத்திரமல்ல, இலங்கை அரசியலிலும் இருந்தும் முற்றாக நீக்கப்பட வேண்டும்.” – என்றார்.