குருந்தூர்மலை விவகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் இனவாதத்தைப் பரப்புவதற்குத் தமிழ்க் கட்சிகள் முற்படுகின்றன என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்ககூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இப்பிரச்சினையைத் தொடர்வதற்கு இடமளிக்கக்கூடாது என அரசிடம் கூறியுள்ளோம். அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதனால் தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழர்களுக்குக் கூட அடையாள அட்டை இன்றி நகரப் பகுதிகளுக்கு வர முடிகின்றது. போர்க் காலத்தில் அவ்வாறான சூழ்நிலை இருக்கவில்லை. எனவே, இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அச்சமின்றி வாழ்வதற்குரிய சூழலை மஹிந்த ராஜபக்சவே ஏற்படுத்திக்கொடுத்தார்.
தமிழ் சகோதரர்கள் அல்லர், தமிழ்க் கட்சிகளுக்கே இனவாதத்தை பரப்ப வேண்டிய தேவை உள்ளது. அதனால்தான் பிரச்சினைகளைத் தோளில் சுமக்கின்றனர். தெற்குக்கும் தவறான செய்தியை வழங்குகின்றனர்.” – என்றார்.