வங்காள விரிகுடாவில் பாக்கு நீரிணையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்திருக்கும் 165 கிலோ மீற்றர் பரப்பளவைக்கொண்ட சர்ச்சைக்குரிய தீவே கச்சத்தீவு.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தத்தீவில் வரலாற்று அடிப்படையில் எந்த மக்களும் வாழ்ந்திருக்கவில்லை.
ஒரு காலத்தில் பச்சைத் தீவு எனும் பெயருடன் இத்தீவு விளங்கியதாகவும், கச்சம் எனப்படும் ஒருவகையான ஆமைகள் இங்கு மிக அதிகமாக காணப்பட்டதனால் கச்ச தீவு என பின்னாளில் மாற்றம் கண்டதாகவும் கூறப்படுகின்றது.
ஒரு காலகட்டத்தில் முத்துக்கள், சங்குகள் போன்றவை ஏராளமாக கிடைக்கப்பெற்றதாகவும் பனை தென்னை போன்ற மரங்களுடன், சுண்ணாம்புத் தயாரிப்பிற்கான ஜிப்சம் ஏராளமாக கிடைக்கப்பெற்றது. அதுமட்டுமன்றி எண்ணெய் வளம் இருக்கக்கூடும் எனவும் ஊகிக்கப்படும் ஓர் இடமாகவும் கச்சத்தீவு திகழ்கின்றது.
பதினேழாம் நூற்றாண்டில் ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமாக இத்தீவு இருந்ததாகவும், 1622 இல் இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கும் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிகளுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின்படி கச்சதீவினை கிழக்கிந்திய கம்பெனிகளின் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
1858 ஆம் ஆண்டில் கம்பெனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இந்தியா இங்கிலாந்து மகாராணியின் ஆட்சிக்குள் கொண்டுவரப்ப்பட்டபோது கச்சத்தீவு ராமநாதபுர சமஸ்தானத்துக்கு சொந்தமானது என எழுத்து பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதுவரையில் எவ்வித பிரச்சினையுமின்றி இருந்த கச்சைதீவானது 1922 இல் இந்தியா மற்றும் இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்களால் இரு நாடுகளுக்குமிடையேயான கடல் எல்லையினை பிரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது கச்சதீவு இலங்கை வரைபடத்துடன் இணைக்கப்பட வேண்டும் என இலங்கை அதிகாரிகள் கோரிக்கைவிட இதற்கு இந்தியாவின் ஆங்கிலேயே அதிகாரிகள் மறுப்புத்தெரிவிக்கவே, கடல் எல்லையினை பிரிக்கும் முயற்சிகள் அத்தோடு கைவிடப்பட்டனவாம்.
அன்றுதொடங்கி இன்றுவரையில் இந்தியா இலங்கை இருநாடுகளுக்குமிடையே கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்கிற பூசல்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.
செயற்கை இழைகள் கண்டுபிடிக்கப்படாத முன்னைய காலப்பகுதியில் நூலினால் பின்னப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் தம்முடைய வலைகளை உலர வைப்பதற்கும், நீண்டநேர கடல்பயணத்தின் சொற்பநேர இளைப்பாறல்களுக்கும் எனஇரு நாட்டு மீனவர்களாலும் காலங்காலமாக கச்சத்தீவு பயன்படுத்தப்பட்டு வந்தது.
1905ஆம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த “சீனிக்குப்ப படையாட்சி” என்பவர் கச்சத்தீவில் மீனவர்களின் பாதுகாவலராக கருதப்படும் போர்த்துகீசிய புனிதரான அந்தோனியாருக்காக கட்டிய தேவாலயத்தில் இன்றுவரை இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் ஒன்றுகூடி விழா கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி உள்நாட்டு தேவைகளுக்காக மீன்பிடிக்கப்பட்ட அன்றைய காலப்பகுதியில் இருதரப்பு மீனவர்களுக்குமிடையே எவ்வித முறுகல் நிலையம் இருந்திருக்கவில்லை. கடல்வளம் பாதுகாக்கப்பட்டதோடு ஒருவர் எல்லையில் அடுத்தவர் மீன்பிடித்தார் என்கிற குற்றச்சாட்டுக்களும் இருந்திருக்கவில்லை.
மீனவ சமூகம் என்கிற அடிப்படையில் அவர்களுக்குள் எவ்வித முரண்பாடுகளும் எழாதிருந்தபோதிலும், கச்ச தீவு யாருக்கு சொந்தம் என்கிற கேள்வி இரு நாட்டு அரசுகளுக்குமிடையே நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டேயிருந்தது எனலாம்.
இரண்டாம் உலக யுத்த முடிவின் பின்னர் நோர்வே நாட்டு உதவியுடன் , ஏற்றுமதிக்காக தென்னிந்தியாவின் கேரளத்தில் அதிவேக மீன்பிடி மோட்டார் படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாரம்பரிய மீன்பிடி தொழிலில் மிகப்பெரிய தாக்கமேற்பட்டது.
ட்ராலர் மூலம் கடலின் ஆழம்வரையில் மீன்களைத்தேடும் இந்த வேட்டையில் , மீன்களின் இனப்பெருக்கத்திற்கு அவசியமான பவளப்பாறைகள் அழியத் தொடங்கியிருந்தாலும், இதன் முதலாளிகளுக்கு பணம் கொழிக்கும் தொழிலாக ட்ராலர் மீன்பிடி மாறியது.
இதனால் பெரும் பணம் படைத்தவர்கள் ட்ராலர்களில் முதலீடு செய்ய,. பாரம்பரிய மீனவர்கள் அவர்களிடம் கூலிகளாக மாறினார். கேரளாவில் அறிமுகமான நோர்வேயின் ட்ராலர் மீன்பிடி முறை படிப்படியாக தமிழகத்தை வந்தடைய , அங்கே ஆரம்பித்தது தமிழக , இலங்கை மீனவர்களின் அடிபிடி எனக்கூட சொல்லலாம் .
இரு நாடுகளுக்கும் பொதுவான அந்த சிறிய கடற்பரப்பில் இந்திய ட்ராலர்களின் எண்ணிக்கை ஏகமாக அதிகரிக்க, எந்தவித தொழில் நுற்ப வளர்ச்சியும் இன்றி இன்னுமே பாரம்பரிய முறையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை மீனவர்களுக்கு பெரும் தலையிடி ஆரம்பித்திருந்தது.
மீனவர்களுக்கிடையிலான பிரச்சினை தீவிரமடைந்துகொண்டிருந்த வேளையில் ,1966ஆம் ஆண்டு இந்தியாவுடனான போரில் வெற்றீயிட்டியிருந்த சீனாவும் ,1971 ஆம் ஆண்டு தன்னுடனான போரில் வெற்றியீட்டி பங்களாதேஸ் என்கிற தனி நாடே உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இந்தியா மீது கடும் அதிருப்தியில் இருந்த பாகிஸ்தானும் இந்துசமுத்திரத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக விளங்கிய இலங்கையை தமது நட்பு நாடாக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.
ஆனால், இலங்கையை தனது நட்பு வட்டத்துக்குள் வைத்திருப்பதே இந்தியாவிற்கு சாதகமானது என்பதை நன்கு உணர்ந்திருந்தார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி.
1974 இதேகாலகட்டத்தில்தான் இலங்கை பிரதமரான ஸ்ரீமா பண்டாரநாயக்கா அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியில் சிக்கிக்கொண்டிருந்தார் . ஆக இலங்கை எக்காரணத்திற்காகவும் இந்திய நட்பு வட்டத்திலிருந்து நழுவிவிடக்கூடாது என எண்ணிய இந்திய பிரதமரும் , இழந்த தன்னுடைய அரசியல் செல்வாக்கினை எப்படியாவது மீள கட்டியெழுப்பவேண்டும் என கருதிய இலங்கை பிரதமரும் பரஸ்பரம் கைக்குலுக்கிக்கொண்டதன் விளைவு கச்ச தீவு 1974 / 06/21 இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.
ஆனாலும் அப்போதைய தமிழக முதலமைச்சர்
மு. கருணாநிதியின் எதிர்ப்பின் பின்னணியில், ஒப்பந்தத்தின் 5 ஆம் சரத்தின்படி இலங்கையிடம் எந்தவித முன்னனுமதியுமின்றி தமிழக மீனவர்களும் கச்சைதீவினை பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டது. ஆறாவது சரத்தின்படி எல்லைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் இரு நாட்டு மீனவர்களுக்கும் இந்த தீவில் உரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
சிறிதுகாலம் எல்லாமும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்ததுபோலும் 1976/03/22 இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வங்காள விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் எல்லையினை பிரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானபோது இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்கக்கூடாது என்கிற நிபந்தனை சேர்க்கப்பட்டது. எனினும், அப்போதைக்கு அதுவும் எவ்வித முறுகல்நிலையினையும் ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும்.
ஆனால் எப்போது இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததோ அப்போதிருந்து மீன்பிடி என்கிற போர்வையில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும், விடுதலைப்புலிகளுக்கான சகல உதவிகளும் தமிழகத்திலிருந்து இலகுவாக இந்த கடல் மார்க்கமாக வழங்கப்படுவதாகவும் கருதிய இலங்கை அரசால் மீண்டும் கையிலெடுக்கப்பட்டது இந்த ஒப்பந்தம்.
நியாயம் கோரிய தமிழக மீனவர்களுக்கு 1976ஆம் ஆண்டு ஒப்பந்தம் இலங்கை அரசால் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் அது வங்காள விரிகுடா மற்றும் மன்னார் விரிகுடா பகுதிக்கு மட்டுமே உரித்தான ஒப்பந்தம் எனவும் அது கச்சத்தீவுக்கு பொருந்தாது என்பதும் தமிழக வாதம்.
2009ஆம் ஆண்டு யுத்தத்திற்குப்பின் வட பகுதியில் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களின் ட்ராலர்களின் வீச்சுக்குமுன்னால் செய்வதறியாது திகைத்தனர்.
இலங்கை மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களின் அதிவேக ட்ராலர்களினால் கிழித்தெறியப்படுவதாக குற்றம்சாட்டினர்.
இதனால், மீண்டும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீதான கைதுகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. தமிழ் நாட்டிலும் எப்போது யார் ஆட்சியை பிடிக்க முனைந்தாலும் கச்சத்தீவை மீட்போம் என்கிற கோஷத்தை எழுப்பத் தொடங்கிவிடுவார்கள்.