‘கச்சத்தீவை மீட்க வேண்டும்’ என்ற குரல், தமிழகம் மற்றும் டில்லி அரசியல் வட்டாரங்களில் தற்போது எழுந்து, அது தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன என்பதை ஊடகங்கள் மூலம் எம்மால் அறியமுடிகிறது
இதன் பின்னணியில், அரசியல் காரணங்கள் இருந்தாலும், ‘உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு கருதி, கச்சத்தீவை திரும்பப் பெறுவது மிகவும் முக்கியம்’ என, இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளும், இந்திய பெருங்கடல் பகுதியின் அரசியல் குறித்து ஆய்வு செய்யும் அறிஞர்களும் கூறிவருகின்றனர்.
இதுதொடர்பாக,இந்திய பாதுகாப்பு துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத்தீவு, 285 ஏக்கர் பரப்பளவு உடையது. 1974 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவை, அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி, நல்லெண்ண அடிப்படையில், ஒப்பந்தம் ஒன்றின் வாயிலாக, 1974 ஜூலை, 8ல் இலங்கையிடம் ஒப்படைத்தார்.
அந்த ஒப்பந்தத்தில், அப்போதைய இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும், இந்தஞபிரதமராக இருந்த இந்திராகாந்தியும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தில், 1976ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, மன்னார் வளைகுடா பகுதியில், இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று கூறப்பட்டது.
இது, தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்களாலும் வேறு பக்கங்களில் பிரச்சினைகளை உண்டுபண்ணி உள்ளது.
இதனால், கச்சதீவு ஒப்பந்த வரையறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்தது.
அது, முடியாது என்றான நிலையில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, அரசியல் ரீதியாக குரல் எழுப்பப்படுகிறது. ஆனால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில், மீனவர்கள் பிரச்னையை காட்டிலும், வேறு பல காரணங்கள் உள்ளன.
சில தினங்களுக்கு முன், அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வில்லியம் மற்றும் மேரி கல்லுாரியின், ‘எய்டு-டேட்டா’ ஆய்வுக்கூடம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், ‘இலங்கை ஹம்பந்தோட்டையில் உள்ள துறைமுகத்தை, தன்னுடைய கடற்படை தளமாக்கும் வேலையில், சீன அரசு ஈடுபட்டுள்ளது. இந்தப் பணியை இரண்டு ஆண்டுகளில் முடித்து விடும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஹம்பந்தோட்டையில், சீனா பணியை வேகமாக முடித்து விட்டால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.
இந்தியாவிற்கு மிக நெருக்கத்தில் இருக்கும் இலங்கையில், சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது கவலைக்குரியது.
ராஜதந்திர அடிப்படையில் நோக்கினால், உள்நாட்டு பாதுகாப்பில் மட்டுமின்றி, தேசிய எல்லை பாதுகாப்பிலும், இந்தியாவுக்கு சீனாவால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது, இந்திய பெருங்கடல் பகுதியில் சரியானதல்ல.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, தென்பகுதியில் வலுவாக காலுான்றிய சீனா, தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலுான்ற முற்படுகிறது.
இலங்கையின் வட பகுதியில், ‘கடலட்டைப் பண்ணைகள்’ என்ற பெயரில், சீனா பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.
இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள், வரலாற்று ரீதியாகவும், இன உணர்வு அடிப்படையிலும், இந்தியாவுடன் குறிப்பாக தமிழகத்துடன் நெருக்கமாக உள்ளனர்.
ஆனால், அந்த மாகாணத்தவருக்குள், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரிவினை ஏற்படுத்தும் வேலையில், சீனா ஈடுபட்டு வருகிறது.
கொழும்புவில் தாமரை கோபுரம், 2019ல் திறக்கப்பட்டது. அப்போது, அக்கோபுரத்தை வடிவமைத்த சீனாவின் தேசிய மின்னணுவியல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம், பல திசைகளிலும் உளவு பார்க்கும் சாதனங்களை, அந்த கோபுர கட்டமைப்பில் ஏற்படுத்தி உள்ளது.
இதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவும் பல ஆண்டுகளாகவே திரிகோணமலையில், ஒரு ராணுவ பாதுகாப்பு தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ‘இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்ய, ராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அது, இலங்கை- – இந்திய பாதுகாப்பில் உற்று நோக்கத்தக்கது.
இந்நிலையில், பூகோள -அரசியல் நிகழ்வுகளையும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு வரப்போகும் ஆபத்துகளையும் ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டிய நிலையில், இந்திய அரசு உள்ளது.
தற்போது, விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கிழக்கு கப்பல்படை தளம் தான், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்நிலையில், கச்சத்தீவை மீட்டு, அங்கும் இந்திய படைத்தளம் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், சீனாவால், இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், இந்தியாவை பாதிக்காமல் இருக்கும். அத்துடன், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.
அரசியல் காரணங்களை கடந்து, இந்திய எல்லைப் பாதுகாப்புக்காகவும் கச்சத்தீவை மீட்பது இந்தியாவின் தலையாய கடமையாகும்.