2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இங்கிலாந்தும் ஸ்பெய்னும் இப்போட்டியில் மோதவுள்ளன.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
9 ஆவது தடவையாக நடைபெறும் மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் இங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகிய இரு அணிகளும் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஸ்பெய்ன் அரை அறுதிக்குக்கும் முதல் தடவையாக தெரிவாகி, சுவீடனை 2-1 கோல்கள் விகிதத்தில் தோற்கடித்து இறதிப் போட்டிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணி, அரை இறுதியில் இணை வரவேற்பு நாடான அவுஸ்திரேலியாவை 3-1 கோல்கள் விகிதத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முன் இங்கிலாந்து அணி 2015 ஆம் ஆண்டு 3 ஆம் இடத்தையும் 2019ஆம் ஆண்டு 4ஆம் இடத்தையும் பெற்றிருந்தது.
இங்கிலாந்து – ஸ்பெய்ன் அணிகள் இறுதியாக கடந்த வருடம் ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால் இறுதிப் போட்டியில் மோதின. இதில் இங்கிலாந்து 2:1 விகிதத்தில் வென்றது.
இப்போட்டியில் சம்பியனாகும் அணிக்கு சம்பியன் கிண்ணத்துடன் அந்நாட்டின் தேசிய கால்பந்தாட்டச் சங்கத்துக்கு 4,290,000 டொலர் பரிசு வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு வீராங்கனைக்கும் டொலர் வழங்கப்படும். இதன்படி சம்பியனாகும் நாட்டுக்கு மொத்தமாக 10,500,000 டொலர்கள் வழங்கப்படும்.
இரண்டாமிடம் பெறும் அணியின் கால்பந்தாட்டச் சங்கத்துக்கு 3,015,000 டொலர்களும் வீராங்கனைகளுக்குத் தலா 195,000 டொலர்களுமாகக மொத்தம் 7,500,000 டொலர்கள் வழங்கப்படும்.