துபாய் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (19) இரவு நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்று ஐக்கிய அரபு இராச்சியம் வரலாறு படைத்தது.
நியூஸிலாந்துக்கு எதிராக இதற்கு முன்னர் விளையாடிய 5 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஐக்கிய அரபு இராச்சியம் 6ஆவது முயற்சியில் வெற்றிபெற்று வரலாறு படைத்தது.
ஆயன் அப்ஸால் கான், முஹம்மத் ஜவாதுல்லா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் அணித் தலைவர் முஹம்மத் வசீம், அசிப் கான் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.
நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 143 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 15.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
ஆரம்ப வீரர் ஆரியன்ஷ் ஷர்மா 3ஆவது பந்தில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததும் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றொரு தோல்வியைத் தழுவப் போகிறது என கருதப்பட்டது.
ஆனால், அணித் தலைவர் முஹம்மத் வசீம், விரித்தியா அரவிந்துடன் 2ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும அசிப் கானுடன் 3ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களையும் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினார். விரித்தியா அரவிந்த் 25 ஓட்டங்களைப் பெற்றதுடன் முஹம்மத் வசீம் 55 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து அசிப் கான், பாசில் ஹமீம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.அசிப் கான் 48 ஓட்டங்களுடனும் பாசில் ஹமீத் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து சார்பாக மூவர் மாத்திரம் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
முன்வரிசை வீரர்களில் ஆரம்ப வீரர் சட் போவ்ஸ் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 21 ஓட்டங்களைப் பெற்றார்.
நியூஸிலாந்து 12ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.எனினும் மார்க் சப்மன், ஜேம்ஸ் நீஷாம் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். ஜேம்ஸ் நீஷாம் 21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மார்க் சப்மன் 63 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் ஆயன் அப்ஸால் கான் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் முஹம்மத் ஜவாதுல்லா 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.