லடாக்கில் இந்திய இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் பலியாகினர். ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கியாரி பகுதிக்கு இராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் கியாரி நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இராணுவ வீரர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், படுகாயமடைந்த வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என லடாக் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.