கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான தங்கத்தினை சூட்சுமமான முறையில் வெளியேற்ற முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (18) இரவு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UK 132 ரக விமானத்தில் இந்தியாவின் மும்பைக்கு புறப்படவிருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் சந்தேகமடைந்த இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் அவரை சோதனையிட்டுள்ளனர்.
அங்கு சந்தேகநபரின் உடலில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தினை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது 1.28 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.