9ஆவது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20ஆம் திகதி தொடங்கியது.இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது.சிட்னி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது.இந்த போட்டியில் அவுஸ்திரேலியா – ஸ்வீடன் அணிகள் மோதின.30ஆவது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார்.
அவுஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து 2ஆவது பாதி தொடங்கியது. 62ஆவது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை கொசோவரே அஸ்லானி ஒரு கோலை பதிவு செய்தார்.
இதனால் 2-0 என்ற கணக்கில் ஸ்வீடன் முன்னிலையில் இருந்தது.கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் அவுஸ்திரேலிய வீராங்கனைகள் திணறினர். இதன்மூலம் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. ஸ்வீடன் அணி 4ஆவது முறையாக வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.