நியூசிலாந்து கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வரும் செப்டெம்பர் மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரின் ஆட்டங்கள் செப்டெம்பர் 21, 23 மற்றும் 26ஆம் திகதிகளில் டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நேற்று உறுதி செய்துள்ளது.
ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்த தொடர் அமையும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் மீண்டும் பங்களாதேஷ் பயணிக்கும் நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் நவம்பர் 28ஆம் திகதியும் கடைசி மற்றும் 2ஆவது டெஸ்ட் டிசம்பர் 6ஆம் திகதியும் தொடங்குகிறது.
நியூசிலாந்து அணி கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருந்தது. தற்போது 10 வருடங்களுக்குப் பின்னர் அங்கு சென்று விளையாட உள்ளது. 2010ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை 4-0 எனவும், 2013இல் நடைபெற்ற தொடரை 3-0 எனவும் கைப்பற்றி இருந்தது பங்களாதேஷ் அணி.