ராமநாதபுரத்தில் இன்று மாலை தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- வீரம் மிகுந்த ராமநாதபுரம் மண்ணில் கூடி இருக்கிறோம். ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு திமுக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ராமநாதபுரத்தில் கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது. வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரம் வளர்ச்சி மாவட்டமாக மாறியுள்ளது. தண்ணியில்லா காடாக இருந்த ராமநாதபுரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தோம். நீண்ட காலமாக ஓடாமல் இருந்த ராமநாத சுவாமி கோயில் தேரை ஓட வைத்தோம். பின் தங்கிய ராமநாதபுர மாவட்ட திமுக ஆட்சியில் தான் வளர்ச்சி கண்டது. திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடும் தொண்டர்களை பாராட்டுகிறேன்.
தமிழகத்தை மீண்டும் ஆள வேண்டுமென கருணாநிதி கண்ட கனவை நிறைவேற்றிவிட்டோம். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி வெற்றிகரமாக முடிந்தது. 68,036 பேர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டத்திற்கு உழைத்தவர்களுக்கு பாராட்டுக்கள். பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகே வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
5 முறை ஆட்சியை கைப்பற்றிய திமுக தற்போது 6 முறையாக ஆட்சி செய்து வருகிறது. திமுக ஆட்சி காலத்தில்தான் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்தான் பாராளுமன்ற வெற்றிக்கும் பொறுப்பாளர்கள். 40ம் நமதே என்ற லட்சியத்துடன் தொண்டர்கள் கம்பீரத்துடன் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை கொண்டுவர வேண்டியது உங்கள் பணி.
வாக்குச்சாவடியில் உள்ள குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நீங்கம் ஒதுக்கினால் போதும். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களின் தேவையை கண்டறிந்து நிறைவேற்றினால் வெற்றி நிச்சயம். தமிழ்நாட்டில் திமுகதான் நிரந்தரமாக ஆளும். இவ்வாறு அவர் பேசினார்.