சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புவிவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 5ஆம் தேதி சந்திரனின் வட்டப் பாதைக்குள் விண்கலம் நுழைந்தது.
மேலும், சந்திரனை விண்கலம் சுற்றி வரும் உயரம் கடந்த 6, 9, 14 ஆகிய தேதிகளில் குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நான்காவது முறையாக இன்றும், சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறைத்தனர்.
தற்போது நிலவிற்கும், சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி நாளை நடைபெறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நிலவின் தென்துருவத்தில் வரும் 23ஆம் தேதி மாலை சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்க இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது.