சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினர். இந்த விசாரணையின்போது செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் பற்றியும் அமலாக்கத்துறையினர் கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.
பின்னர் செந்தில் பாலாஜி கடந்த 12-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத்துறையினர் மறுத்து விட்டனர். இந்த நிலையில் அசோக்குமார் மத்திய உளவு துறையின் பிடியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் அமலாக்கத்துறையில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அவர் எப்போது சரண் அடைவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சரண் அடைந்த பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.