Home World இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு.

இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு.

0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

கடந்த மே மாதம் ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. வன்முறை தொடர்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வழங்கிய விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் நினைவு பரிசுகளை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்து அந்த பணத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் அவரை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், அவரை 5 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில், வன்முறை போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கோரி இம்ரான் கான் தரப்பில் நீதிமன்றங்களில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 9 ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 3 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றமும், 6 மனுக்களை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது.

அதே சமயம் கருவூல பரிசுப் பொருட்களுக்கான போலி ரசீது தொடர்பான வழக்கில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் இடைக்கால ஜாமீன் செப்டம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version