விசேட சுற்றிவளைப்பில் 5,000 ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 18 போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேகநபர்களை இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவுடன் இணைந்து கட்டுநாயக்க பொலிஸார்,இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இவர்களில் ஒருவர் கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய பெண் எனவும் மற்றையவர் நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞரும் ஆவார்.
இந்த இளைஞன் கட்டுநாயக்கா, கோவின்ன பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வருவதுடன், இருவரும் அதே பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
கட்டுநாயக்க 18 ஆவது மைல்கல் பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து உணவு பெற்ற இந்த பெண் 5000 ரூபாய் போலி நாணயத்தாளை கொடுத்துள்ளார். இது தொடர்பில் உணவக உரிமையாளர் கட்டுநாயக்க பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த பெண்ணை கைது செய்த கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீண்ட விசாரணைகளின் பின்னர் கையடக்கத் தொலைபேசி பழுதுபார்ப்பவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கையடக்கத் தொலைபேசி பழுதுபார்ப்பவர் வசம் இருந்த 5,000 ரூபாய் மதிக்கத்தக்க 17 போலியான நாணயதாள்கள், இந்த தாள்களை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட கலர் ஸ்கேனர் மற்றும் பல கணினி சாதனங்களும் கைப்பற்றப்பட்டன.
கட்டுநாயக்காவை அண்மித்த பகுதிகளில் இந்த போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருக்கக்கூடும் என்பதால், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அப்பகுதி மக்களுக்கு கட்டுநாயக்க பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.