Friday, December 27, 2024
HomeSrilankaமன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.

மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.

செப்டம்பர் 15 முதல் தலைமன்னார் – கொழும்பு இடையில் நகர்சேர் ரயில் சேவை ஆரம்பம். வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்க திட்டம், மடு மாதா தேவாலய திருவிழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு.

தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திகான் மற்றும் கத்தோலிக்க சபையின் ஆசீர்வாதம்.

மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வருடம் மடுமாதா திருவிழா கூட்டுத் திருப்பலிப் பூஜையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும். திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதை அடுத்து மடுமாதாவின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. வருடாந்த மடுமாத திருவிழாவில் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மடு மாதாவுக்கு மகுடம் சூட்டப்பட்டு 2024ஆம் ஆண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை நினைவுகூறும் நிகழ்வுகளை வருடம் முழுவதும் நடத்த ஆலய நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பாராட்டுக்குரியது எனவும் வத்திக்கான் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆசீர்வாதமும் இதற்கு கிடைக்கும் எனவும் மடு திருவிழாவில் கலந்து கொண்ட இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி அதி வண. பிரையன் உடைக்வே ஆண்டகை Rev. Dr.Brian Udaigwe) தெரிவித்தார்.

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரிய பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய பிரையன் அவர்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் மத முகவராக மாறுவதா அல்லது நாட்டை ஒன்றிணைக்கும் மதத் தலைவராக மாறுவாரா என்பது அவரவர் செய்யும் செயற்பாடுகளிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

”மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது எமது நாட்டு கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும். இந்தத் திருவிழாவை தேசிய நிகழ்வாகக் கருதி அதனைப் பாதுகாக்கவும் தொடர்ச்சியாக நடத்தவும் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கி வருகிறது. அத்தோடு வருடாந்த மடு திருவிழாவை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து அருட்தந்தையர்களுக்கும் அரசாங்கம் சார்பில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மடுமாதாவிடம் பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பெற ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். கடந்த வருடம் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, பெருமளவான மக்கள் இங்கு வந்து மடு மாதாவின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் நாடினர். அந்த கடினமான நிலைமையில் மடு மாதாவின் ஆசீர்வாதமும் எமக்கு பலமாக அமைந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம் அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை எரிசக்தி மையமாக உருவாக்க முடியும். மேலும், பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன். மேலும், இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.

அடுத்த மாதம் முதல் மன்னாரிலிருந்து கொழும்புக்கு நகர்சேர் கடுகதி ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ளஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுகிறது. அவரின் வேண்டுகோளுக்கு அமைய வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னார் ஆயர் கலாநிதி அதி வண. இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி மன்றத் தலைவர் கலாநிதி சந்ரா பெர்ணான்டோ உள்ளிட்ட அருட்தந்தையர்கள், கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்கள் அருந்திக பெர்னாண்டோ, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் பெருந்திரளான பக்தர்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments