நாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாளை (15-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இந்த மாதல் முதலே பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பு நடைமுறை 16-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, பணி நேரம் 12 மணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, சோதனைகள் நடந்து வருகின்றன. சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். அதைப்போல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்துவந்து கண்காணிக்கின்றனா். அதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய்களுடன் சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்களுக்கு ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அதைப்போல் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாஸ்களிலும், கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.
அதைப்போல் விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப் பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.