இன்று 14 ஆம் திகதி தொடக்கம் 7 நாட்களுக்கு வடமாகாணத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது பகுதிகளில் டெங்கின் தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் எதிர்வரும் ஒரு மாதங்களில் மழை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே டெங்கின் தாக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே ஜனாதிபதி அவர்கள் இலங்கை பூராகவும் டெங்கு கட்டுப்பாட்டுக்காக விசேட குழுக்களை அமைத்து செயல்படும்படி கேட்டிருக்கின்றார், அதன் பிரகாரம் மாகாணமட்ட குழுக்கள், மாவட்ட மட்ட குழுக்கள் மற்றும் பிரதேச கிராமமட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குழுக்கள் குறிப்பாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது, ஆகவே வடமகாணத்திலும் இதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றது. ஆளுநர் தலைமையில் நடைபெற்ற அந்த கலந்துரையாடலுக்கு பின்னர் பிரதம செயலாளர் மற்றும் சுகாதார செயலாளரோடு மாகாண மட்ட கலந்துரையாடல் நடைபெற்று 14 ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரத்துக்கு வட மாகாணத்தின் சகல இடங்களிலும் டெங்கு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது,
அதாவது, டெங்கு விழிப்புணர்வு மற்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தப்படும்படி இந்த மாகாணத்தில் உள்ள சகல இடங்களிலும் இந்த விடயங்கள் பற்றி செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதன் பிரகாரம் நாங்கள் டெங்கு வாரத்தை அறிவித்திருக்கின்றோம் அதாவது எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 7 நாட்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் சகலரும் ஈடுபட வேண்டும்.
குறிப்பாக இந்த வருடம் இலங்கை பூராகவும் ஐந்தரை மாதங்களில் 45,612 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது, இதில் யாழ் மாவட்டத்தில் 1472 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 76 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 103 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 100 பேருக்கும் டெங்கு இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே யாழ் மாவட்டத்தில் அதிகளவிலானோர் டெங்கு நோய்க்கு உள்ளாகி இருக்கின்றார்கள், குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, நல்லூர் மற்றும் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவானோர் டெங்கு நோய்க்கு உட்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே வடமாகாணத்தில் இருக்கின்ற சகல பகுதிகளிலும் டெங்கு நோய் தோற்றும் அபாயம் காணப்படுகிறது, பருவப்பேச்சி மழையில் டெங்கு நோய் பரப்பும் நுழம்புகள் பெருகும் அபாயம் காணப்படுகிறது, ஆகவே சகல தரப்பினரும் டெங்கு நோயை இல்லாத ஒழிப்பதற்கு முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக அந்தந்த பிரதேசங்களில் இருக்கின்ற பாடசாலை வளாகமாக இருக்கலாம், அரசாங்க சேவை நிலையமாக இருக்கலாம், அல்லது தனியார் நிலையமாக இருக்கலாம், அதாவது டெங்கு அபாயத்தை விளைவிக்கக்கூடிய நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்கள் கிரமமாக அகற்றப்பட்டு அந்தந்த பிரிவின் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற பிரதேச சபைகளின் ஊடாக அகற்றப்பட்டால் டெங்கு நோயை எமது பகுதிகளில் மிகவும் குறைவான அளவில் கட்டுப்படுத்த முடியும்.
மாகாண மட்டத்தில் அல்லது மாவட்ட மட்டத்தில் இருக்கின்ற சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதவர்கள் இந்த விடயங்களை அவர்கள் வினைத்திறனோடு இந்த கடமைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவார்கள். ஆகவே அவர்கள் பகுதிகளுக்கு வருகின்ற போது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் அனைவரும் பொறுப்போடு டெங்கு நோய் பரவும் அபாயத்தை இல்லாத ஒளிக்க வேண்டும். இது தனியே சுகாதாரத் திணைக்களத்துக்கான வேலை மாத்திரமல்ல, தனியே நகர சபைகள் பிரதேச சபைகளுக்கான வேலைகள் மாத்திரமல்ல அனைத்து தரப்பினரும் இந்த டெங்கு நோய் பரவும் அபாயத்தை இல்லாது ஒளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.