கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022ஆம் ஆண்டு 225,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்தனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 2019ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியர்களுக்கு அதிக அளவில் குடியுரிமை வழங்கிய நாடுகள் என இந்திய உள்துறை அமைச்சு 2022ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டன.
இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் ஏழாவது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 7,000 இந்தியர்கள் அதே காலகட்டத்தில் அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிக அளவு குடிபெயர்ந்த மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. அவர்கள் மூலம் நாட்டின் செல்வத்தையும் பொருளியலையும் அது பெருக்க முடியும். இருப்பினும், வேகமாக வளர்ந்து வரும் பொருளியலைக் கொண்ட நாட்டுக்கு திறனாளர்களின் வெளியேற்றம் நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னடைவாக இருக்கும்.
“இந்தியர்கள் பலர் இந்தியக் குடியுரிமையைத் துறந்து வெளிநாட்டுக் குடியுரிமை பெற விரும்புகின்றனர். அதை அறிந்துதான் அரசாங்கம் அவர்களின் திறமையை உள்நாட்டிலேயே பயன்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜூலை மாதம் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுப் பேசும்போது கூறினார்.
மேலும், வெற்றிகரமான, செல்வாக்குமிக்க வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களால் இந்தியாவிற்கு ஆதாயம்தான். நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்வதே இந்தியாவின் அணுகுமுறை என அவர் தெரிவித்தார்.