வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (11.08.2023) தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தின் முன் நின்ற இளைஞர்கள் மீது புதன் கிழமை மாலை வாள் வீசி சிலர் அட்டகாசம் செய்துள்ளனர்.
இதன்போது நிலமையை கட்டுப்படுத்த முயன்ற புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒருவர் மீதும் வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றதும் வாள்களுடன் நின்றவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் களமிறங்கிய விசேட அதிரடிப்படையினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து வவுனியா பொலிசில் ஒப்படைத்தனர்.
மற்றும் ஒரு நபர் வவுனியா பொலிசில் சரணடைந்துள்ளார். சரணடைந்தவர் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இச் சம்பவத்தையடுத்து விசேட அதிரடிப் படையினர் வவுனியா வைவரவபுளியங்குளம் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.