Saturday, December 28, 2024
HomeSrilankaபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தற்போது 40 கைதிகள் மாத்திரமே சிறையில்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தற்போது 40 கைதிகள் மாத்திரமே சிறையில்!

அரசு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகமானவர்களைச் சிறையில் அடைத்து வருகின்றது எனச் சிலர் கூறினாலும் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் சுமார் 40 பேரே இருக்கின்றனர் என்று நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், அது ஒருபோதும் சமூகத்தில் கருத்தாடலுக்கு உள்ளாகியுள்ள வகையில் பணம் செலுத்தி தனியான சிறைச்சாலை அறைகளைப்  பெற்றுக்கொள்வதற்குச் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சந்தேகநபர்கள் மற்றும் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் என தற்போது 28 ஆயிரத்து 468 சிறைக்கைதிகள் இருக்கின்றனர். சிறைக்கைதிகளில் 50.3% சதவீதமானவர்கள் போதைப்பொருள் சம்பந்தமான குற்றத்துக்காகத் தண்டனை பெற்றவர்கள். அவர்களாலேயே சிறைச்சாலைகளில் தற்போது பாரிய சிக்கல் காணப்படுகின்றது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தண்டனை பெறும் இவ்வாறான குற்றவாளிகளுக்குத் தண்டைனைகளை வழங்குவது மாத்திரம் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. இவர்களுக்கு திறன் விருத்தி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் புனர்வாழ்வளிப்பது அவசியமாகும்.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதும் மீண்டும் அதே தவறைச் செய்வதைத் தடுக்க முடியும்.

சிறைக்கைதிகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்று ஒரு சிலர் குற்றஞ்சாட்டினாலும் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியிலும் சிறைக்கைதிகளுக்கு உணவு வழங்க மாத்திரம் அரசு 3.9 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டு வருகின்றது. 2021 – 2022 காலப் பகுதியிலும் கூட இதற்கான நிதியை அரசு ஒதுக்கி இருந்தது.

சிறைச்சாலைகளில் 13 ஆயிரம் சிறைக்கைதிகளுக்கே இடவசதி இருக்கின்ற போதிலும், தற்போது சுமார் 29 ஆயிரம் கைதிகள் இருப்பது பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. அதற்காக திறைசேரியில் இருந்து பாரியளவு நிதி சிறைச்சாலைகளுக்கு வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு அவசியமான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை தோன்றுகின்றது.

இதனால் சிறைச்சாலைகளின் செலவைக் குறைக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாரிய குற்றவியல் குற்றங்கள் இன்றி, சிவில் குற்றங்களுக்கு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட முன்னர் அவர்கள் தொடர்பான விசாரணை நிறைவைடையும் வரை குற்றம் சாட்டப்படுபவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகையினரை வீட்டுக்காவலில் தடுத்து வைக்கும் திட்டம் குறித்து ஆலோசித்து வருகின்றோம். சிறைக்கைதிகளை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நேரடியாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தவும், ஏனையவர்களைச் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும் நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிறைக்கைதிகளையும் நாட்டுக்கு பயன்மிக்கவர்களாக மாற்றும் வகையில் மேலும் பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அந்தவகையில் சிறைச்சாலைக்குள்ளே உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய தொழிற்சாலைகளை நிறுவுவது குறித்து கலந்தாலோசித்து வருவதுடன் தனியார் துறையின் பங்களிப்புடன் இந்தப் பணியை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது, இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இத்திட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழு அவற்றை தற்போது பரிசீலித்து வருகின்றது. சிறைச்சாலைகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பின் மாத்திரம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

இவ்வாறு சிறைக்கைதிகள் தொழில்முயற்சிகளில் ஈடுபட்டு பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை, அவர்களின் பிள்ளைகளின் கல்விக்காகவும், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கைதிகளால் வரையப்பட்ட ஓவியங்களை உள்ளடக்கிய ஓவியக் கண்காட்சியொன்று கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுசெல்வதைத் தடுக்கத் தற்போது நடைமுறையில் உள்ள வழிமுறைகளுக்கு மேலதிகமாக மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கூடுதல் பரிசோதனைக்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பிரதான நகரங்களில், வர்த்தகப் பெறுமதிக்க இடங்களில் அமைந்துள்ள சிறைச்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து கடந்த காலங்களில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. தற்போது அதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் அதிகரித்து வரும் போதைப்பொருளுக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெறுபவர்களை தனியாக வைத்து மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் புனர்வாழ்வளிப்பதற்குமான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments