நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. ரஜினிகாந்தின் 169-வது படமான ஜெயிலர் படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்கவில்லை. இருந்தபோதும் தியேட்டர்கள் முன்பு அவரது ரசிகர்கள் படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து பிரமாண்ட பேனர்கள் வைத்திருந்தனர்.
திண்டுக்கல்லில் 7 தியேட்டர்களில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டது. படம் வெற்றிபெற வேண்டி ரஜினி ரசிகர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக தியேட்டருக்கு வந்தனர். மேலும் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் இசைத்தும் ஆடிப்பாடி தியேட்டருக்கு வருகை தந்தனர். ரஜினிகாந்தின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும், தீபாராதனை காட்டியும் மகிழ்ந்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியில் உள்ள தியேட்டர் முன்பு ஜெயிலர் படம் வெற்றிபெற வேண்டி காங்கிரஸ் சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்திருந்தனர். இதேபோல பா.ஜ.க. சார்பிலும் அக்கட்சி நிர்வாகிகள் பேனர்கள் வைத்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்தது போன்ற புகைப்படம், அண்ணாமலை படம் ஆகியவற்றுடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதேபோல ரஜினி ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இந்திராகாந்தி, ஜெயலலிதா ஆகியோரது படங்களும் இடம் பெற்றிருந்தன. இதனால் அனைத்து கட்சி சார்பிலும் ஜெயிலர் படத்திற்கு வரவேற்பு தெரிவித்து போஸ்டர் மற்றும் பேனர்கள் இடம் பெற்றிருந்தன.