ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவத்தால் ஆக்ரமித்தது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு ரஷியா மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பிற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது.
இந்த ரஷிய-உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களாக தாக்குதல்களில் இரு நாடுகளும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.
இந்நிலையில் உக்ரைன் இரு டிரோன்களை ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஏவியது. இவற்றை ரஷியாவின் விமானப்படை தாக்கி அழித்தது. மாஸ்கோவின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடிடோவோ (Domodedovo) பகுதியின் மீது ஏவப்பட்ட ஒரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது. தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேலே இன்னொரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது.
வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவோ அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல்கள் இல்லை. ரஷியாவின் மாஸ்கோ நகரை குறிவைத்து ஒரே வாரத்தில் 3-வது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.