Home Srilanka தற்போதும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கமே! – சிறீகாந்தா தெரிவிப்பு.

தற்போதும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கமே! – சிறீகாந்தா தெரிவிப்பு.

0

“தமிழ்த் தேசியக் கட்சிக்குள் சில விவகாரங்கள் உள்ளமை உண்மை. ஆனால், அது கட்சிக்குள் பேசப்பட்ட – கட்சிக்குள் தீர்க்கப்படக்கூடிய விவகாரங்கள். சிவாஜிலிங்கமே தற்போதும் கட்சியின் பொதுச்செயலாளர். தேவையெனில் கட்சியின் தேசிய மாநாட்டில் அதில் மாற்றங்கள் வரலாம்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா.

தமிழ்த் தேசியக் கட்சியிலிருந்து அதன் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று முன்னர் தகவல்கள் பரவின. பரவிய சில மணி நேரங்களிலேயே அந்த விடயம் மறுக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தன், சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என்று நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திக் கூறினார். இதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தாவிடம் தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிவாஜிலிங்கத்துக்கு மதிப்புக்குரிய கடந்தகால வரலாறுள்ளது. அவர் சொல்லும் ஒரு விடயத்தின் தர்க்கம் பற்றி கேள்வியெழுப்பலாம். ஆனால், அவரின் கட்சி விசுவாசம் பற்றி சந்தேகம் எழுப்ப முடியாது.

கட்சிக்குள் சில விவகாரங்கள் இருப்பது உண்மை. ஆனால், இந்த நிமிடம் வரை சிவாஜிலிங்கமே கட்சியின் பொதுச்செயலாளர். நான்தான் தலைவர். கட்சியின் விவகாரங்கள் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் இருவரில் ஒருவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம்.

கட்சியின் தலைமைக்குழுவில் சில முறை கூடி சில விவகாரங்களைத் தீர்க்க முயன்றோம். அது கட்சிக்குள் நடக்கும் விவகாரம். அது பகிரங்கப்படுத்த வேண்டியதில்லை என்பதால் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை. இந்த விடயங்கள் கட்சிக்குள்ளேயே எம்மால் தீர்க்கப்படும்.” – என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version