கொலம்பியா நாட்டில் போதை மருந்து கடத்தலும், அது தொடர்பான கொலைகளும் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அங்கு இக்குற்றங்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ உசுகா.
இவர் இத்தொழிலில் வடக்கு கொலம்பியாவின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அமெரிக்காவிற்குள் கடத்தி வரப்பட்ட பல டன்கள் போதை பொருள் கடத்தலை ஒடோனியல் நிர்வகித்துள்ளார். இதனால் அவரை அமெரிக்கா தேடி வந்தது. ஒடோனியல் தலைக்கு அமெரிக்கா சுமார் ரூ.40 கோடி ($5 மில்லியன்) பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஒடோனியல் தனது எதிரிகளை கொல்ல இரக்கமின்றி உத்தரவிட்டார்.
மேலும் பலரை சித்ரவதை செய்துள்ளார். ஒருவரை உயிருடன் புதைத்தார். பொது மக்களை பயமுறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். போலீஸ் தாக்குதலில் அவரது சகோதரர் கொல்லப்பட்ட பிறகு, ஒரு நாள் முழுவதும், “வீட்டிலேயே இருங்கள் அல்லது உயிரை இழப்பீர்கள்” என பொதுமக்களுக்கு உத்தரவிட்டு விட்டு காவல்துறையினரை கொல்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்து அவர்களை வேட்டையாடினார். இந்நிலையில், 2021ம் வருடம், நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கொண்ட தேடுதல் வேட்டை ஒன்றில் இறுதியாக அவரது மறைவிடத்தில் இருந்து ஒடோனியல் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர், கொலம்பியாவில் இருந்து அவரை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டது. கொலம்பியாவுடன், ‘நாடு கடத்தல்’ நடைமுறைகளை அமெரிக்கா துவங்கியபோது, ஒரு நிபந்தனையாக அவருக்கு ஆயுள் தண்டனையை அமெரிக்க அரசாங்க வக்கீல் கோர வேண்டாம் என்று கொலம்பியா கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.
அதன்பின்னர் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஒடோனியல் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதாகவும், தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஒடோனியல் கூறினார்.
இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. கொலம்பிய அதிபர் இவான் டுக், ஒடோனியலை குறித்து கூறியதாவது: ஒடோனியலை, போதைப்பொருள் கடத்தலில் பெரும்புள்ளியாக திகழ்ந்த பாப்லோ எஸ்கோபாருடன் மட்டுமே ஒப்பிட முடியும்.
அவர் உலகின் மிகவும் ஆபத்தான கடத்தல்காரர் மட்டுமல்ல, பல சமூக தலைவர்களை கொலை செய்தவர். சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளம் பருவத்தினரை துஷ்பிரயோகம் செய்தவர். மேலும், பல காவல்துறையினரை கொன்றவர்.