தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்கினார். 5 கட்டங்களாக வருகிற ஜனவரி மாதம் வரை நடைபெறும் இந்த யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். முதல் கட்ட யாத்திரை வருகிற 22-ந்தேதி நெல்லையில் முடிவடைகிறது.
நேற்று முன்தினம் ஓய்வு என்பதால் அண்ணாமலை சென்னை புறப்பட்டு வந்தார். நேற்று மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாகவும், அந்த கூட்டத்தில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசுவதாகவும் இருந்தது. ஆனால் பாராளுமன்ற கூட்டம் காரணமாக மத்திய மந்திரி வர இயலவில்லை. இதனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அண்ணாமலையின் யாத்திரை இன்று தொடங்குவதாக இருந்தது. இப்போது அதுவும் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
நாளை விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்து தொடங்குவார் என அறிவிக்கப்பட்டது. வருகிற 19-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் நடைபயணம் தொடங்குகிறது. 21-ந்தேதி ஓய்வு, 22-ந்தேதி நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது அந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மத்திய மந்திரிகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுக்கூட்டங்கள் நடத்துவதை விட்டுவிட்டு நடைபயணத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.