இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கை வந்துள்ள நிலையில், இன்று(7) பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறார்களை சந்திக்கும் கண்காணிப்பு பயணத்தில் இணைந்தார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்கவின் விசேட அழைப்பின் பேரில், சச்சின் டெண்டுல்கர் இலங்கை வந்துள்ளார்.
யுனிசெஃப் தெற்காசிய பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான சச்சின் டெண்டுல்கரின் மேற்பார்வையின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான யுனிசெப்பின் குழந்தை ஊட்டச்சத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திஸாநாயக்கவுடன் ருவன்வெல்ல பல்லேக்னுகல கனிஷ்ட கல்லூரிக்குச் சென்ற சச்சின் டெண்டுல்கர், பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் எவ்வாறு கற்கைகள் இடம்பெறுகின்றன என்பதை அவதானித்தார்.
பின்னர், கல்லூரி மைதானத்துக்குச் சென்று கிரிக்கெட் விளையாடினார்.
மேலும் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ருவன்வெல்ல, கோனகல பிரதேசத்தில் உள்ள முன்பள்ளிக்கு சென்று சிறுமிகளின் நடத்தைகளை ஆராய்ந்து பின்னர் அவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.