இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிப்பொது முகாமையாளர் ஒருவர் பெருந்தொகை பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெருந்தொகை பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிப்பொது முகாமையாளரிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் அதிகாரி விடுமுறை எடுத்துக்கொண்டு அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் அமெரிக்கா செல்வதாக அறிவித்து கனடாவிற்கு தப்பிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு மூன்று மாத பயணமாக விடுப்பு எடுத்து சென்ற நிலையில், தனது மனைவி மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இவ்வாறு தான் கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், கனடாவில் வேலை கிடைத்துள்ளதாகவும், பணியிலிருந்து விலகுவதாகவும் அந்த அதிகாரி மனைவிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் பீப்பாய்கள் மாயமானமை தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ள அந்த அதிகாரி இலங்கைக்கு வர வேண்டும் எனவும் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, இந்த எரிபொருள் மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரையும் அணுகியுள்ளதோடு, எதிர்காலத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் பலரிடமும் திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.