வடக்கு, கிழக்கிலாவது முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போதே தாம் மேற்கண்டவாறு வலியுறுத்தியதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
“வடக்கில் கிழக்கிலாவது முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்தச் சொல்லுங்கள். பொலிலிஸ் அதிகாரத்தைப் பிரச்சினையாக்கி மாகாண சபையை மறுப்பது நியாயமல்ல.
இந்தியத் தூதரகத்தில் அமைந்துள்ள மலையகக் கல்வி அறக்கட்டளையைப் புதுப்பியுங்கள்.
அதன்மூலம் இந்திய அரசின் 300 கோடி நன்கொடையை மலையகக் கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்துங்கள். அந்த நிதி யாருக்காக, எதற்காக வழங்கப்பட்டதோ அதற்காகப் பயன்பட வேண்டும் என்று இந்தியத் தூதுவருடனான சந்திப்பின்போது எடுத்துரைத்தோம்.” – என்றார்.